நவி மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 1-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை ஆஸ்திரேலிய அணி முழுமையாக 3-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்காக லிட்ச்ஃபீல்ட் 49 ரன்கள் மற்றும் எல்லிஸ் பெர்ரி 37 ரன்கள் எடுத்தனர். இந்திய பவுலர் சாது 4 விக்கெட்களை கைப்பற்றி இருந்தார்.
142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இந்தியா விரட்டியது. ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷெபாலி வர்மா இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் 137 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்மிருதி, 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி வரை விளையாடிய ஷெபாலி, 44 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். மூன்று சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். 17.4 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது. 2-வது டி20 போட்டி வரும் 7-ம் தேதி நடைபெறுகிறது.