பிரக்ஞானந்தாவுக்கு அதானி குழுமம் ஸ்பான்சர்!

அகமதாபாத்: இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் செய்வதாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பிரகாசமான சதுரங்க திறமையாளர்களில் ஒருவராகக் கருதப்படும் 18 வயதான கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு ஸ்பான்சர் வழங்க அதானி குழுமம் முடிவு செய்துள்ளது. இதன்ஒரு கட்டமாக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பேசினார். இதன் பின்னர் கவுதம் அதானி கூறும்போது, “திறமையான பிரக்ஞானந்தாவை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம். விளையாட்டில் அவர் முன்னேறிய வேகம் மற்றும் செயல்திறன் குறிப்பிடத்தக்கது.

அவர், அனைத்து இந்தியர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதையும், மிக உயர்ந்த மட்டங்களில் பதக்கங்களை வெல்வதையும் விட உன்னதமானது எதுவும் இல்லை. இந்த பயணத்தில் விளையாட்டு வீரர்களை ஆதரிப்பதில் அதானிகுழுமம் முழு மனதுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்படுகிறது” என்றார்.

பிரக்ஞானந்தா கூறும்போது, “நமது நாடு உலக அரங்கில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்வதில் மிகவும் ஆர்வமாக உள்ளேன். நான் விளையாடும் போதெல்லாம், தேசத்திற்கு அதிக விருதுகளை வெல்வதே எனது ஒரே நோக்கம். எனது திறனில் நம்பிக்கை வைத்துள்ள அதானி குழுமத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.