சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சிட்னியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 313 ரன்கள் சேர்த்தது. முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82, ஆகா சல்மான் 53 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில்பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி மழையால் பாதிக்கப்பட்ட 2-வது நாள் ஆட்டத்தில் 47 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான டேவிட் வார்னர் 34, 47 ரன்களில் ஆட்டமிழந்தனர். மார்னஷ் லபுஷேன் 23, ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 3-வதுநாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 109.4ஓவர்களில் 299 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்னில் மிர் ஹம்சா பந்தில் வெளியேறினார். தனது 18-வது அரை சதத்தை கடந்த மார்னஷ் லபுஷேன் 60 ரன்களிலும், 8-வது அரை சதத்தை நிறைவுசெய்த மிட்செல் மார்ஷ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 10, அலெக்ஸ் கேரி 38, பாட் கம்மின்ஸ் 0, நேதன் லயன் 5, ஜோஷ்ஹேசில்வுட் 0 ரன்களில் வெளியேறினர். பாகிஸ்தான் அணி தரப்பில்அமீர் ஜமால் 6 விக்கெட்களையும்,ஆகா சல்மான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
14 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணியானது ஜோஷ் ஹேசில்வுட் பந்து வீச்சில் ஆட்டம் கண்டது. அப்துல்லா ஷபிக் ரன் ஏதும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்தில் போல்டானார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷான் மசூதும் ரன்கணக்கை தொடங்குவதற்கு முன்னரே ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் நடையை கட்டினார். சற்று தாக்குப்பிடித்து விளையாடிய அறிமுக வீரரான சைம் அயூப் 33 ரன்களில் நேதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.
முன்னாள் கேப்டனான பாபர் அஸம் 23 ரன்களில் டிராவிஸ் ஹெட் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 25-வது ஓவரை வீசிய ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்களை கொத்தாக அள்ளினார். அவரது பந்து வீச்சில் சவுத் ஷகீல் (2), சஜித் கான் (0), ஆகா சல்மான் (0) ஆகியோர் நடையை கட்டினர். நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் பாகிஸ்தான் அணி 26 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது.
முகமது ரிஸ்வான் 6, அமீர் ஜமால் ரன் ஏதும் சேர்க்காமல் களத்தில் இருந்தனர். 82 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி கைவசம் 3 விக்கெட்கள் இருக்க இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது. ரிஸ்வான் 28 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து அமீர் ஜமால் மற்றும் ஹசன் அலி ஆகியோரும் ஆட்டமிழந்தனர். 2-வது இன்னிங்ஸில் 115 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாகிஸ்தான். 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆஸ்திரேலியா விரட்டி வருகிறது.