பெங்களூரு: கன்னட நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து பேனர் வைக்க முயன்ற மூன்று ரசிகர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம், கடக் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமந்த் (24), முரளி (20), நவீன் (20) ஆகிய மூவரும் நடிகர் யாஷ் பிறந்தநாளை முன்னிட்டு சூரனகி என்ற கிராமத்தில் டிஜிட்டல் பேனர் வைக்க முடிவு செய்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் அங்கிருந்து மின்கம்பம் ஒன்றில் ஏறி பேனரை கட்டிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு உதவி செய்த மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேனரில் இருந்து இரும்பு ப்ரேம், மின்கம்பத்தில் இருந்த கம்பியில் உரசியதால் மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மூவரின் உடல்களையும் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த ஷிரஹட்டி எம்எல்ஏ சந்துரு லமனி, இரும்பு பேனர்களை பொது இடங்களில் கட்டவேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டதாகவும், உயிரிழந்தவர்களிடம் குடும்பத்தை சந்திக்குமாறு நடிகர் யாஷிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.