“வரலாற்றில் ஒரு மைல்கல்… அயோத்தி ராமர் கோயில் நிகழ்வில் பங்கேற்கிறேன்” – சிரஞ்சீவி

ஹைதராபாத்: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் நடிகர் சிரஞ்சீவி தனது குடும்பத்துடன் கலந்துகொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள ‘ஹனுமன்’ தெலுங்கு படம் வரும் ஜனவரி 12-ம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ப்ரீ ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிரஞ்சீவி கலந்துகொண்டார். அப்போது நிகழ்வில் பேசிய அவர், “ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ‘ஹனுமன்’ குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளது.

அதாவது, படத்தின் ஒவ்வொருக்கு டிக்கெட் கட்டணத்தில் இருந்தும் ரூ.5 ரூபாய் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கு வழங்கப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு. படக்குழு சார்பாக நான் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். படக்குழுவின் உன்னதமான நோக்கத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டது வரலாற்றில் ஒரு மைல்கல். இதன் தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ள எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 22-ம் தேதி நடைபெறும் நிகழ்வில் குடும்பத்துடன் கலந்துகொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், மாதுரி தீக்‌ஷித், அனுபம் கெர், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள், அரசியல் தலைவர்கள் என 7,000 விருந்தினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.