ஹைதராபாத்: ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் ‘தேவரா’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் 2022-ம் ஆண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிக்கிறார்.
‘தேவரா’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துவருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ், சைஃப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கின. இரண்டு பாகங்களாக உருவாக உள்ள இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
க்ளிம்ஸ் எப்படி? – ஆங்கில வரிகளுடன் அனிருத் குரலில் பாடல் ஒலிக்க இருளில் அலையடிக்கும் கடல் அச்சத்த்தை விதைக்கிறது. அந்தக் கடலில் உள்ள கப்பலில் இருந்து கன்டெய்னர்கள் சில திருடப்படுகின்றன. அடுத்த நொடியே பின்னணி இசையில் ஹைபிச் ஏற, கத்தியை சுழற்றியபடி சுற்றியிருப்பவர்களின் கொன்று குவிக்கிறார் ஜூனியர் என்டிஆர். அடுத்து கடலின் கரையில் உள்ள நீர் முழுக்க சிவப்பு நிறமாக மாறுகிறது.அதாவது அத்தனை பேரை கொன்றதன் சாயல் அது.
அந்த ரத்தக் கடலில் கத்தியைக் கழுவுகிறார் ஜூனியர் என்டிஆர். “இந்தக் கடல்ல மீன விட அதிகமா கத்தியும் ரத்தமும் கொட்டிக் கிடக்கு. அதனாலதான் இதுக்குப் பேரு செங்கடல்” என புது விளக்கம் கொடுப்பதுடன் கிளிம்ஸ் முடிகிறது. ஜூனியர் என்டிஆர் ரசிகர்களைத் தாண்டி, பொதுவான ரசிகர்களுக்கு கிளிம்ஸ் வீடியோ ஈர்த்ததா என்பது கேள்விக்குறி. வீடியோ: