இந்தியத் தீவுகளுக்கு பதிலாக ‘மாலத்தீவு’ புகைப்படம்: ரன்வீர் சிங் ‘சம்பவம்’ வைரல்

மும்பை: மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாலிவுட் பிரபலங்கள் லட்சத்தீவை புகழ்ந்தும், மாலத்தீவை புறக்கணிக்குமாறும் கூறி வருகின்றனர். அந்த வகையில் ரன்வீர் சிங் செய்த ‘சம்பவம்’ ஒன்று வைரலாகி வருகிறது.

மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக் கருத்துக்குப் பின் பாலிவுட் பிரபலங்கள் பலரும் லட்சத்தீவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர். குறிப்பாக அக்‌ஷய்குமார், கங்கனா ரனாவத், சல்மான் கான், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்ட பலரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் லட்சத்தீவின் அழகை வியந்து பாராட்டியிருந்தனர். மேலும் ‘மாலத்தீவை புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கும் இடம்பெற்றியிருந்தது. அந்த வகையில் நடிகர் ரன்வீர்சிங் தன் பங்குக்கு தானும் இந்தியத் தீவுகளை புகழ்ந்து பதிவிட்டிருந்தார்.

ரன்பீர் தனது பதிவில், “நாம் நாட்டின் பல பகுதிகளுக்குச் செல்லவும், நமது கலாச்சாரத்தை அனுபவிப்பதற்குமான ஆண்டாக 2024-ஐ மாற்றுவோம். நம் நாட்டில் சுற்றிப் பார்க்க நிறையவே உண்டு. #exploreindianislands” என பதிவிட்டிருந்தார். ஆனால், அந்தப் பதிவில் இந்தியத் தீவுகளின் புகைப்படத்துக்கு பதிலாக அவர் மாலத்தீவு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதனைக் கண்ட நெட்டிசன் ஒருவர், “இந்தியத் தீவுகளை பிரபலப்படுத்துவதாக கூறி மாலத்தீவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளீர்கள். என்ன ஆயிற்று ரன்வீர்?” என கேட்டிருந்தார். உடனே பதிவிலிருந்து புகைப்படத்தை டெலிட் செய்துள்ளார் ரன்வீர். ஆனாலும், இதன் ஸ்கிரீன்ஷாட்கள் வைரலாகி வருகிறது.

பின்னணி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமர் மோடியின் பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார்.மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.

மாலத்தீவின் இளைஞர் நலன், தகவல், கலை துறை இணை அமைச்சர் மரியம் ஷியுனா, பிரதமர் மோடி குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளை பதிவு செய்தார். பிரதமர் மோடியை மோசமாகவும் இஸ்ரேலின் ஊதுகுழல் என்றும் அநாகரிகமாக அவர் விமர்சனம் செய்தார். மாலத்தீவு இளைஞர் நலத் துறை இணையமைச்சர் மால்ஷா ஷெரீப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், மோசமாக விமர்சித்திருந்தார். இதையடுத்து 3 பேரும் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே ‘மாலத்தீவை புறக்கணிப்போம்’ என்ற ஹேஷ்டேக்கும், லட்சத்தீவை புகழ்ந்த பதிவுகள் வைரலாகின. பாலிவுட் பிரபலங்கள் பலரும் இதில் களமிறங்கி லட்சத்தீ்வுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.