ஜிம்பாப்வே உடனான 2-வது ஒருநாள் போட்டியை போராடி வென்ற இலங்கை அணி!

கொழும்பு: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை போராடி வென்றது இலங்கை கிரிக்கெட் அணி. 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்த வெற்றியை பெற்றுள்ளது இலங்கை.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங் தேர்வு செய்தது.

அந்த அணி 44.4 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணி விரட்டியது. அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. 90 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது இலங்கை. அந்த அணியின் பேட்ஸ்மேன்களில் ஜனித் லியனகே மறுமுனையில் நிதானமாக பேட் செய்தார். அவர் 127 பந்துகளில் 95 ரன்கள் எடுத்தார். இருந்தும் 43-வது ஓவரில் அவர் ஆட்டமிழந்தார்.

பின்னர் துஷ்மந்தா மற்றும் ஜெப்ரி இணைந்து இலங்கை அணிக்கு தேவைப்பட்ட வெற்றிக்கான ரன்களை எடுத்தனர். 49 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இலங்கை. இந்தப் போட்டியில் வெற்றிக்கு அருகே சென்ற ஜிம்பாப்வே அணி அதனை எட்ட முடியாமல் போனது.