சென்னை: வெளிநாட்டிலிருந்து இன்று சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி காலமானார். விஜயகாந்த்தின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாத பல திரைப் பிரபலங்கள் தேமுதிக அலுவலகத்தில் உள்ள நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வெளிநாட்டிலிருந்து இன்று (ஜன.09) சென்னை திரும்பிய நடிகர் விஷால் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்துக்கு சென்று அங்கு அஞ்சலி செலுத்தினார் அவருடன் நடிகர் ஆர்யாவும் உடன் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பொதுமக்களுக்கு விஷால் உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசுகையில், “கலையுலகம் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் நல்ல மனிதர் என்று பேர் வாங்கிய ஓர் அரசியல்வாதி, துணிச்சலான அரசியல்வாதி என்று பெயர் வாங்கியவர் விஜயகாந்த். பொதுவாக ஒரு நல்ல மனிதர் இறந்த பிறகுதான் சாமி என்று சொல்வோம். ஆனால் விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போதே சாமி என்று அழைக்கப்பட்டவர்.
’திருமூர்த்தி’ என்ற திரைப்படம். அதில் டைட்டிலேயே அவர் மக்களுக்காக செய்த நல்ல விஷயங்களை காட்டியிருப்பார்கள். அவர் மீட்டுக் கொண்டு வந்த நடிகர் சங்கத்தில் நான் பொதுச் செயலாளராக இருப்பதற்கு அவருடைய உழைப்பும், தைரியமும் தான் காரணம்.
சட்டமன்றமாக இருந்தாலும் சரி, திரைப்படம் ஆனாலும் சரி எல்லா வகையில் மனதில் இடம்பெற்றவர். மதுரை பகுதிகளில் என் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது அங்கிருக்கும் பெரியவர்கள் விஜயகாந்த் பட ஷூட்டிங்கின் போது அவருடைய குணத்தை பற்றி இப்போதும் பேசுவார்கள்.
அவர் உயிருடன் இருந்திருந்தால் அவரிடம் நான் சொல்லும் ஒரு வார்த்தை இதுதான். ‘என்னை மன்னிச்சிடு சாமி’ அவ்வளவுதான். நான் அவரது இறுதிச் சடங்கில் அவருடன் இருந்து அவருடைய முகத்தை பார்த்திருக்க வேண்டும். அவருடைய குடும்பத்துக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” இவ்வாறு விஷால் பேசினார்.
வெளி நாட்டிலிருந்து சென்னை வந்தடைந்த நடிகர் விஷால் கேப்டன் விஜயகாந்த் சமாதிக்கு சென்று வணங்கி மரியாதை செலுத்தினார்.
அங்கு வருகிற பொது மக்கள் அனைவருக்கும் சாப்பாடு அவர் சொந்த செலவில் வழங்கினார் . நடிகர் ஆர்யா உடனிருந்தார். #actorvishal @VishalKOfficial @VffVishal… pic.twitter.com/8vD40gj571
— Johnson PRO (@johnsoncinepro) January 9, 2024