“இனி வில்லன், கவுரவ வேடங்களில் நடிக்கப் போவதில்லை” – விஜய் சேதுபதி திட்டவட்டம்

சென்னை: இனி வில்லன் கதாபாத்திரங்களிலும், கவுரவ வேடங்களிலும் நடிக்கப் போவதில்லை என்று நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க அணுகுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதி கூறியதாவது: “வில்லன் கதாபாத்திரம் மற்றும் கவுரவ வேடங்களில் என்னை நடிக்க வைக்க அணுகுபவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். நான் வேண்டாம் என்று சொன்ன கவுரவ வேடங்களே பத்து, இருபது இருக்கும். ஒருகட்டத்துக்கு மேல் நான் அதை தவிர்த்து விட்டேன். நாம் நடிப்பதால் அந்த படத்துக்கு கவனம் கிடைக்கிறது, அதில் ஒன்றும் தவறு இல்லையே என்று முன்பு எனக்கு ஒரு பார்வை இருந்தது. ஆனால் அது அதிகமாக வர தொடங்கியதும் அதற்கு நோ சொல்லிவிட்டேன். ஒரு கட்டத்தில் நான் ஹீரோவாக நடிக்கும் படங்களின் வியாபாரத்தையே அது பாதிக்கிறது.

வில்லனாக நடிப்பதும் கூட நிறைய பேர் கேட்க ஆரம்பித்து விட்டனர். ஒரு கட்டத்துக்கு மேல அது வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தை நோக்கி போகிறது. வேண்டாம் என்று சொன்னாலும் கதையை கேட்டுவிட்டு சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள். எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்க இயலவில்லை” இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘அந்தாதூன்’ இந்திப் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்ததாக இயக்கும் படம் ‘மெரி கிறிஸ்துமஸ்’. விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்துள்ள இப்படம் வரும் ஜன. 12ஆம் தேதி வெளியாகிறது.