IPL 2024 | பயிற்சியை தொடங்கிய சிஎஸ்கே கேப்டன் தோனி: வைரலான வீடியோ!

ராஞ்சி: அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் 2024 சீசன் தொடங்க உள்ள நிலையில் அதற்கான பயிற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுவும் அவர் பேட்டிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வைரலாக வலம் வருகிறது.

42 வயதான தோனி, கடைசியாக கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி இருந்தார். அதன் பிறகு ஐபிஎல் களத்தில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் சீசனில் அவர் தலைமையிலான சென்னை அணி தான் சாம்பியன் பட்டம் வென்று அசத்தி இருந்தது. கடந்த சீசன் முழுவதும் சென்னை அணியின் கேப்டன் தோனி செல்லும் இடமெல்லாம் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. தோனி களம் காணும் போது சேப்பாக்கம் மைதானம் ரசிகர்களின் கூக்குரலால் விண்ணை பிளந்தது. ரசிகர்களின் அன்புக்காக 2024 ஐபிஎல் சீசனிலும் விளையாடுவேன் என தோனி சொல்லி இருந்தார்.

அதன்படி அவர் தனது பயிற்சியை தொடங்கியுள்ளார். குடும்பத்துடன் அமீரகத்தில் புத்தாண்டை கொண்டாடி விட்டு ராஞ்சி திரும்பிய நிலையில் பயிற்சியை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று அவர் உடற்பயிற்சியும் மேற்கொண்டார்.

தோனி – சிஎஸ்கே: ஐபிஎல் கிரிக்கெட்டில் சிஎஸ்கே அணிக்காக 220 போட்டிகளில் தோனி விளையாடு உள்ளார். 191 இன்னிங்ஸ்களில் 4,508 ரன்கள் எடுத்துள்ளார். 125 கேட்ச் மற்றும் 34 ஸ்டம்பிங் செய்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 137.48.

2024 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, பதிரனா, ரஹானே, ஷேக் ரஷீத், சான்ட்னர், சிமர்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்‌ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ்.