முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது நியூஸி.

ஆக்லாந்து: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்து நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 226 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக டேரில் மிட்செல் 27 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 61 ரன்களும் கேப்டன் கேன் வில்லியம்சன் 42 பந்துகளில், 9 பவுண்டரிகளுடன் 57 ரன்களும் விளாசினர். ஃபின் ஆலன் 34, மார்க் சாப்மேன் 26, கிளென் பிலிப்ஸ் 19 ரன்கள் சேர்த்தனர்.

227 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக பாபர் அஸம் 35 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்தார். சைம் அயூப் 27, முகமது ரிஸ்வான் 25, இப்திகார் அகமது 24, பஹர் ஸமான் 15 ரன்கள் சேர்த்தனர்.

நியூஸிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 4 விக்கெட்களையும் ஆடம் மில்ன், பென் சீயர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.