“மம்மூட்டி நடித்திருப்பதாக கூறியதும்…” – விஜய் ரியாக்‌ஷனை பகிர்ந்த ஜெயராம்

கொச்சி: மம்மூட்டியின் கதாபாத்திரத் தேர்வு குறித்து நடிகர் விஜய் பாராட்டியதை நடிகர் ஜெயராம் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The GOAT) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிக்கிறார். இந்நிலையில் ‘The GOAT’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை நடிகர் ஜெயராம் அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

அதில் பேசிய அவர், “நான் விஜய்யிடம் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’ என்ற என்னுடைய புதிய படம் ரிலீசாகிறது என சொன்னேன். உடனே என்னிடம் ஓடி வந்தவர், படத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறாரா எனக் கேட்டார். அப்படியென்றால் நான் உடனடியாக படத்தை பார்க்க வேண்டும். ஏனென்றால் மம்மூட்டி நடித்திருந்தால் நிச்சயம் அந்த கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும். அவர் புதிதாக ஏதாவது செய்திருப்பார்” என்று ஆவலுடன் கேட்டார். பின்னர் விஜய்க்காக பிரத்யேக திரையிடலை ஏற்பாடு செய்தோம் என்றார் ஜெயராம். இந்த காணொலியை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ஆப்ரஹாம் ஓஸ்லர்: ‘ஆடு’, ‘ஆடு 2’, ‘அஞ்சாம் பதிரா’ உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்த முண்ணனி மலையாள இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஆப்ரஹாம் ஓஸ்லர்’. இதில் நடிகர் ஜெயராம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெடிக்கல் க்ரைம் கதைக்களத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். நேற்று (ஜன.12) திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.