மும்பை: பாலிவுட் நடிகர் ஆமீர்கானின் மகள் ஐரா கான் திருமண வரவேற்பு நிகழ்வில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி முதல் ஷாருக்கான் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
பாலிவுட்டின் மெகா ஸ்டார் ஆமிர் கானுக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரீனா தத்தா. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் ஜுனைத் கான் மற்றும் மகள் ஐரா கான். ரீனா தத்தாவை விவாகரத்து செய்தபின் இரண்டாவதாக கிரண் ராவை திருமணம் செய்த ஆமிர் கான் அவரையும் பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஆமிர் கானின் மகள் ஐரா கான் தனது காதலன் நுபுர் ஷிகாரேவை திருமணம் செய்துள்ளார். உதய்பூரில் ஜனவரி 6 முதல் ஜனவரி 10 வரை ஐந்து நாட்கள் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்தது. முன்னதாக, ஜனவரி 3-ம் தேதியே தம்பதிகள் இருவரும் தங்கள் திருமணத்தை மும்பையில் பதிவு செய்தனர்.
இதனையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி மும்பையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, சல்மான் கான், ஷாருக்கான், கவுரி கான், கங்கனா ரனாவத், ரன்பீர் கபூர், கத்ரீனா கைஃப், ரேகா, ஹேமமாலினி, சச்சின் டெண்டுல்கர், அனில் கபூர், நாக சைதன்யா, ராஜ்குமார் ஹிரானி, ஸ்மிருதி இரானி, ஏ.ஆர்.ரஹ்மான், ஜெயா பச்சன், ராஜ் தாக்ரே உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் 9 மாநில உணவு வகைகள் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.