“பிரதமர் மோடி அனைவராலும் மதிக்கப்படுபவர்” – மாலத்தீவு பயணத்தை ரத்து செய்த நாகார்ஜுனா

ஹைதராபாத்: பிரதமர் மோடி குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சை கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா தனது மாலத்தீவு பயணத்தை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “என்னுடைய குடும்பத்துக்கு நான் அதிக நேரம் ஒதுக்காத நிலையில், ஜனவரி 17-ம் தேதி மாலத்தீவு செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக எந்த இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து 75 நாட்கள் பணியாற்றினேன். அடுத்த வாரம் மாலத்தீவு செல்வதற்கான அனைத்து டிக்கெட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டேன். அதற்கு பதிலாக லட்சத்தீவுக்கு செல்ல இருக்கிறேன்.

மாலத்தீவுக்கு நான் சில முறை சென்றிருக்கிறேன். ஆனால் இந்த முறை செல்லப்போவதில்லை. நமது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள் மோசமானதாக இருந்தன. அதற்கான விலையை அவர்கள் கொடுக்கப்போகிறார்கள். பிரதமர் மோடி 1.5 பில்லியன் மக்களின் தலைவர் மற்றும் உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்படுபவர்” என தெரிவித்துள்ளார்.