அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்: தோனிக்கு நேரில் அழைப்பு

ராஞ்சி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த கோயிலின் கும்பாபிஷேக நிகழ்வில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பாக சங் பரிவார் அமைப்பினர் முக்கிய பிரமுகர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்தித்து அழைப்பிதழையும், ராமருக்கு பூஜை செய்த அக்ஷதையையும் வழங்கி வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல்வேறு பிரபலங்கள் சுமார் 6,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தோனிக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

தோனியின் ராஞ்சி இல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இணை மாகாண செயலாளர் தனஞ்சய் சிங், அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி உள்ளார். அப்போது பாஜகவின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கர்மவீர் சிங்கும் உடனிருந்தார். முன்னதாக, விராட் கோலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோருக்கு ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ல் கடைசியாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் தோனி. அதன்பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள், சாதுக்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொள்ள உள்ளனர்.