SL vs ZIM 2-வது டி20 போட்டி | கடைசி ஓவரில் த்ரில் வெற்றி: இலங்கையை வீழ்த்திய ஜிம்பாப்வே

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது ஜிம்பாப்வே அணி. கடைசி ஓவரில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட அதனை ஒரு பந்துகள் எஞ்சியிருக்க எட்டி அசத்தியது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையா இலங்கையை வீழ்த்தி உள்ளது ஜிம்பாப்வே.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி வருகிறது. முன்னதாக, இரு அணிகளும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை வென்றது. தொடர்ந்து கடந்த 14-ம் தேதி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கியது. முதல் டி20 போட்டியில் இலங்கை வென்றது. இரண்டாவது டி20 போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசியது.

இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. அசலங்கா, 39 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தார். மேத்யூஸ் 66 ரன்கள் எடுத்திருந்தார். 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஜிம்பாப்வே விரட்டியது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிரேக் எர்வின், 54 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார். 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும். லூக் ஜாங்வே மற்றும் பிரையன் பென்னட் தலா 25 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கிளைவ் மடாண்டே, 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். 19.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

கடைசி ஓவரில் 20 ரன்கள்: மேத்யூஸ் வீசிய கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. ஜாங்வே மற்றும் மடாண்டே அந்த ஓவரை எதிர்கொண்டனர். முதல் பந்தை நோ-பாலாக வீசிய நிலையில் அதை சிக்ஸர் விளாசி இருந்தார் ஜாங்வே. தொடர்ந்து பவுண்டரி மற்றும் சிக்ஸர் விளாச ஜிம்பாப்வே அணியின் வெற்றி உறுதியானது. 3-வது பந்து டாட் ஆனது. 4-வது பந்தில் சிங்கிள் எடுக்க 5-வது பந்தில் சிக்ஸர் விளாசி வெற்றியை உறுதி செய்தார் மடாண்டே. இதன் மூலம் இந்த தொடர் 1-1 என சமனில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.