டூனிடின்: பாகிஸ்தானுக்கு எதிரான 3-வதுடி 20 கிரிக்கெட் போட்டியில் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நியூஸிலாந்து அணிதொடரை 3-0 என தன்வசப்படுத்தியது.
டூனிடின் நகரில் நேற்று நடைபெற்ற 3-வது டி 20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க வீரரான ஃபின் ஆலன் 62 பந்துகளில், 16 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 137 ரன்களை விளாசினார்.
இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் நியூஸிலாந்து அணிக்காக ஓர் இன்னிங்ஸில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஃபின் ஆலன். இதற்கு முன்னர் 2012-ம்ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பிரண்டன் மெக்லம் 123 ரன்கள் விளாசியிருந்தார். இந்த சாதனையை தற்போது முறியடித்துள்ளார் ஃபின் ஆலன்.
மேலும் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் ஓர் இன்னிங்ஸில் அதிகசிக்ஸர்கள் விளாசிய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரத்துல்லா ஸஷாயுடன் பகிர்ந்து கொண்டார். ஹஸ்ரத்துல்லா கடந்த 2019-ம் ஆண்டு அயர்லாந்து எதிரான ஆட்டத்தில் 16 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்தார்.
டூனிடின் போட்டியில் டிம் ஷெய்பர்ட் 31, கிளென் பிலிப்ஸ் 19 ரன்கள் சேர்த்தனர். டேரில் மிட்செல் 8, டேவன் கான்வே 7, மார்க் சாப்மேன் 1, மிட்செல் சாண்ட்னர் 4, மேட் ஹென்றி 1, இஷ் சோதி 3 ரன்கள் சேர்த்தனர்.
225 ரன்கள் இலக்குடன் பேட் செய்த பாகிஸ்தான் அணியால் 20ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக பாபர் அஸம் 58, முகமது நவாஷ் 28, முகமது ரிஸ்வான் 24, பஹர் ஸமான்19 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் ஷாகீன் ஷா அப்ரிடி 16, முகமதுவாசிம் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூஸிலாந்து அணி தரப்பில் டிம் சவுதி 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணியானது 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடரை 3-0 என தன்வசப்படுத்தியது. முதல் டி 20 ஆட்டத்தில் 46 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது டி 20 ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்திலும் நியூஸிலாந்து அணி வெற்றி கண்டிருந்தது.