சென்னை: ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் கோகுல் இயக்கியுள்ள ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி நாயகனாக நடித்துள்ள படம், ‘சிங்கப்பூர் சலூன்’. இதில், சத்யராஜ், மீனாட்சி சவுத்ரி, லால், ரோபோசங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ்கனகராஜ், ஜீவா கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். கோகுல் இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று (ஜன.18) வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – பொறியியல் படித்து முடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி, கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தும் அதனை உதறுகிறார். தனது சிறுவயது கனவான முடிதிருத்தும் நிபுணர் ஆகும் ஆசையில் இருக்கும் அவர் தனது லட்சியத்தை அடையும் முன் எதிர்கொள்ளும் இன்னல்கள் சிறு துணுக்குகளாக ட்ரெய்லரில் நமக்கு காட்டப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜியுடன் லால், சத்யராஜ், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, சின்னி ஜெயந்த் ரோபோ ஷங்கர், ஜான் விஜய் என பெரும் நடிகர் கூட்டமே இதில் இடம்பெற்றுள்ளது.
காதல், காமெடி, சென்டிமென்ட் என ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டெயினராக படம் உருவாக்கப்பட்டிருப்பதை யூகிக்க முடிகிறது. “முடி வெட்டுவது எல்லாம் குலத் தொழில்.. நமக்கு எப்படி செட் ஆகும்?” என்று கேட்கும் தலைவாசல் விஜயிடம், “இன்ஜினியரிங் நம்ம குலத் தொழிலா?” என்று ஆர்.ஜே.பாலாஜி கேட்கும் வசனம் கவனிக்க வைக்கிறது. லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரின் கேமியோ படத்தின் கதைக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று நம்புவோம். இப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.