கொச்சி: மோகன்லால் நடித்துள்ள ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத்தில், ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’,‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படங்கள் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இவர் மோகன்லால் நடிப்பில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். ஜனவரி 18-ம் தேதி ராஜஸ்தானில் இதன் படப்பிடிப்புத் தொடங்கியது. அங்கு பொக்ரானில் ஏராளமான வெளிநாட்டு துணை நடிகர்களுடன் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
மோகன்லால், மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தில் கொடூர அடுக்குமுறையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக காட்டப்படுகிறது. “கடலில் இருந்து சூரியன் உதிச்சு வரும். அந்த சூரியனின் தீ இந்தக் கோட்டையை சாம்பலாக்கும்” என்ற வசனத்துடன் மோகன்லாலுக்கு கொடுக்கப்படும் இன்ட்ரோவும், அதற்கான பின்னணி இசையும் கவனிக்க வைக்கிறது. படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’ என்ற மீட்பர் ஹீரோவின் கதையாக தோன்றுகிறது.
மோகன்லாலுக்கு ஏற்ற வெகுஜன சினிமாவாக உருவாகியுள்ள இப்படத்தில் தற்போதை சினிமாக்களில் தவறாமல் இடம்பிடிக்கும் கத்தி, துப்பாக்கி, தோட்டாவுடன் ரத்தமும் தெறிக்கிறது. மோகன்லால் சொன்னது போல படம் திரையரங்குகளில் காண்பதற்கான நியாயத்தை சேர்க்கும் வகையில் பிரம்மாண்டத்துடன் கலர்ஃபுல் காட்சிகளாக கவர்கிறது. படம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ட்ரெய்லர் வீடியோ: