சென்னை: “விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நடிக்க தயார். என்னை, எப்போது வேண்டுமானாலும் அணுகலாம்” என்று விஜயகாந்த் நினைவேந்தல் கூட்டத்தில் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், “விஜயகாந்த் இயங்கிய நடிகர் சங்கத்தில் நானும் ஒரு உறுப்பினராக, பொதுச்செயலாளராக, தேமுதிகவுக்கு வாக்களித்தவனாக உங்களின் வருகைக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த உதவி இயக்குநர்களுக்கு உணவளித்தவர்; உணவில் எந்த பாரபட்சமும் பார்க்ககூடாது என எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு ஊக்கமாக திகழ்ந்தவர் விஜயகாந்த். அவர் பாதையில் நாங்களும் அந்த முயற்சியில் ஈடுபட்டோம். விஜயகாந்தின் இறப்பின்போது அங்கே நாங்கள் இருந்திருக்க வேண்டும். மரியாதை செலுத்தியிருக்க வேண்டும். அன்று நானும் ஊரில் இல்லை, கார்த்தியும் இல்லை. இதனால் விஜயகாந்த் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்புக் கேட்டுகொள்கிறேன்.
பல நடிகர்கள் வளர வாய்ப்புக் கொடுத்தவர் விஜயகாந்த். அந்த வகையில் சண்முக பாண்டியனிடம் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன். ‘உன்னுடைய படத்தில் எப்போதாவது நானும் சேர்ந்து நடிக்க வேண்டும் என ஆசை இருந்தால் நான் வருகிறேன். என்னை பயன்படுத்திக்கொள்ள உனக்கு விருப்பம் இருந்தால் நானும் உன்னுடன் தூணாக இருந்து படத்தில் நடித்து தருகிறேன்’. தமிழ்நாட்டில் ஒரு தலைவனை நாம் மிஸ் செய்கிறோம்.
ஈகோ இல்லாத மனிதர்கள் குறைவு. அதில் முன்னுதாரணமாக இருந்தவர் விஜயகாந்த். 54 புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்திய ஒரே உலக நாயகன் விஜயகாந்த் தான். 54 பேரின் வீடுகளில் விளக்கேற்றி வைத்தவர். எந்த புகாரும் இல்லாத ஒரே நடிகர் விஜயகாந்த்” என்றார்.