பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருமான ரவீந்திர ஜடேஜா, இன்ஸ்டாகிராம் தளத்தில் சக சிஎஸ்கே சகாக்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு கவனம் ஈர்த்துள்ளது.
அடுத்த சில மாதங்களில் ஐபிஎல் 2024 சீசனுக்கான தொடர் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்ததும் ஐபிஎல் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்த உள்ளார். இது அவர் பங்கேற்று விளையாடும் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில், நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன் சிஎஸ்கே களம் காண்கிறது. அதனால் தோனியின் மஞ்சள் படை இறுதிக்கு முன்னேறினால் இறுதிப் போட்டி சென்னை – சேப்பாக்கத்தில் நடக்கவே வாய்ப்பு உள்ளது. எதிர்வரும் சீசனுக்கான பயிற்சியை தோனி தொடங்கி உள்ளதாக தகவல்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சகாக்களான ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சஹார் மற்றும் ஷர்துல் தாகூருடன் தான் இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார் ஜடேஜா. “6-வது கோப்பை லோடிங்” என சொல்லும் வகையில் கேப்ஷன் பதிவிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த சீசனில் குஜராத் அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. அணிக்கு தேவைப்பட்ட வெற்றி ரன்களை எடுத்துக் கொடுத்தவர் ஜடேஜா தான். நால்வரும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் இந்த படத்தை எடுத்துள்ளதாக தகவல்.
அவர் தற்போது பகிர்ந்துள்ள படத்தை சிஎஸ்கே ரசிகர்கள் லைக் செய்து வருகின்றனர். அதேநேரத்தில் கோப்பை வெல்லாத அணிகளின் பெயர்களை ரசிகர்கள் சிலர் கமெண்ட் பிரிவில் குறிப்பிட்டு வருகின்றனர். சிலரோ எதிர்வரும் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் கவனம் செலுத்துமாறு தெரிவித்துள்ளனர்.
2024 சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, பதிரனா, ரஹானே, ஷேக் ரஷீத், சான்ட்னர், சிமர்ஜித் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ்.