“அரசியல் பேசினால் என்ன தவறு?” – கீர்த்தி பாண்டியன் ஆதங்கம்

சென்னை: “அரசியல் பேசினால் என்ன தவறு? நாம் உண்ணும் உணவு உடை என ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது” என நடிகை கீர்த்தி பாண்டியன் பேசினார்.

இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு நடித்துள்ள ‘ப்ளூ ஸ்டார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன் “இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது. அமர்ந்து பேசுவதற்குக் கூட இடம் கிடைக்காமல் நானும் இயக்குநர் ஜெயக்குமாரும் பைக்கில் 15 நிமிடத்திற்கும் மேல் அலைந்து திரிந்தோம். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து கதையை என்னிடம் இயக்குநர் விளக்கினார். கதை பிடித்திருந்ததால் நான் நடிக்க சம்மதித்தேன்.

பா.ரஞ்சித் படத்தை தயாரிக்கிறார் என்று தெரிந்ததுமே எல்லோருமே என்ன அரசியல் பேசத் துவங்கிவிட்டீர்களா? என்று கேட்கிறார்கள். அரசியல் பேசினால் என்ன தவறு?. நாம் உண்ணும் உணவு உடை என்று ஒவ்வொன்றிலும் இன்று அரசியல் இருக்கிறது. நம் வாழ்க்கையிலும் அரசியல் இருக்கிறது. அரசியல் பேசாமல் தவிர்ப்பதால் நம் வாழ்க்கையில் அரசியல் இல்லை என்று ஆகிவிடாது. அதை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

எல்லாப் படங்களில் அரசியல் இருக்கத்தான் செய்கிறது. பா.ரஞ்சித் பேசும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. இன்று மிகமிக முக்கியமான நாள். இன்று நாடு இருக்கின்ற சூழலைப் பார்க்கும் போது பாடலாசிரியர் அறிவு அவர்கள் பாடிய வரிகளின் படி, “காலு மேல காலு போடு ராவணகுலமே” என்று பாடத் தோன்றுகிறது” என்று பேசினார்.

அசோக் செல்வன் பேசுகையில், “இப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். மனதுக்கு நெருக்கமான படமும் கூட. ஏன் என்று கேட்டால் இந்தக் கதையா, இல்லை இக்கதையில் இருக்கும் அரக்கோணம் மக்களா, அவர்களின் வாழ்க்கை என் வாழ்க்கையோடு ஒத்துப் போனதா என்று சொல்லத் தெரியவில்லை. வாய்ப்பு தேடி அலையும் காலத்தில் யாரும் அரவணைத்து ஆறுதல் கூறி, நம்பிக்கை கொடுக்கமாட்டார்களா என்று ஏக்கம் இருக்கும். அப்படி ஏங்கிக் கொண்டிருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் ப்ளு ஸ்டார் நம்பிக்கையை கொடுத்து, ஜெயிக்கிறோம் என்கின்ற உத்வேகத்தைக் கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது.

ப்ளூ ஸ்டார் திரைப்படம் எனக்கு அத்தனையையும் கொடுத்திருக்கிறது. நான் வாழ்ந்த வாழ்க்கையை திரையில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. மனைவியை கொடுத்திருக்கிறது. சிலர் பேசுவதற்கும் செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. பா.ரஞ்சித் என்ன பேசுகிறாரோ அது போலவே நடப்பவர். அந்த மாதிரியான மனிதர்களை நான் பார்த்ததில்லை. எந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் நான் இவ்வளவு பேசியதில்லை. இப்படத்தில் நான் பேசுகிறேன் என்றால், இப்படத்தை நான் மிகவும் ஸ்பெஷலாக உணர்வதால் தான்” என்றார்.

'+divToPrint.innerHTML+'