திருவனந்தப்புரம்: அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், நடிகை பார்வதி அரசியல் அமைப்புச் சட்டத்தின் முகப்பு பக்கத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. அதேவேளையில், ஒரு நாட்டின் பிரதமரே ஒரு குறிப்பிட்ட மதத்தின் கோயில் விழாவில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வரும் நிலையில், மலையாள நடிகை பார்வதியின் இன்ஸ்டா பதிவு கவனம் பெற்றுள்ளது. நடிகை பார்வதி திருவோத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவில், 1949-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புப் பக்கத்தில் ‘இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு நாடாக இந்தியா எப்போதும் இருக்கும்’ என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவர் பகிர்ந்த இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு பக்கத்தைப் பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் யாரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதனிடையே, இந்தப் பதிவு தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
பாலிவுட் தரப்பிலிருந்து அமிதாப் பச்சன் கலந்துகொண்டார். மேலும், ரன்பீர்கபூர், ஆலியா பட், விக்கி கவுஷல், கத்ரீனா கைஃப், ஆயுஷ்மான் குர்ரானா, மாதுரி தீட்சித், அபிஷேக் பச்சன், அனுபம் கெர், கங்கனா ரனாவத், நடிகர் ரன்தீப் ஹூடா – லின் லைஷ்ராம், விவேக் ஓப்ராய், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ரோகித் ஷெட்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அதோடு, தெலுங்கு நடிகர் பவன் கல்யாணும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.