அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் அமைந்துள்ள ராமர் கோயிலில் திங்கள்கிழமை பால ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து பால ராமர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்தச் சூழலில், அயோத்தி பால ராமர் கண்களை சிமிட்டும் வகையிலான ஏஐ வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
கோலாகலமாக நடைபெற்ற ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் மோடி, உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் உட்பட பலர் பங்கேற்றனர். கிரிக்கெட் வீரர் சச்சின், நடிகர் ரஜினிகாந்த், தொழிலதிபர் முகேஷ் அம்பானி என பல்வேறு பிரபலங்களும் பங்கேற்றனர். தொடர்ந்து பொதுமக்கள் பால ராமரை தரிசித்து வருகின்றனர். அயோத்தி நகரில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது.
இந்நிலையில், அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் தனது கண்களை சிமிட்டுவது போலவும், முக பாவனைகளை மேற்கொள்ளும் வகையிலும் வீடியோ ஒன்று உருவாக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இந்த வீடியோ பார்க்க அப்படியே பால ராமர் உயிர்தெழுந்து வந்தது போல இருப்பதாக சமூக வலைதள பயனர்கள் கமென்ட் செய்துள்ளனர்.
இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கி இருக்கலாம் எனத் தெரிகிறது. அண்மைய நாட்களாக ஏஐ பயன்பாடு சார்ந்த அச்சுறுத்தல் நிலவி வரும் சூழலில், இந்த வீடியோ பாசிட்டிவ் வைபை பரப்பும் வகையில் அமைந்துள்ளது. ‘பால் வடியும் முகத்த பாரு’, ‘பச்சை குழந்தை சிரிப்ப பாரு’ என பயனர்கள் இந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.