வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதை வென்ற ரச்சின்: டி20 கிரிக்கெட்டர் சூர்யகுமார் யாதவ்

துபாய்: 2023-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார் நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா. 2023-க்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதை இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் வென்றுள்ளார்.

ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் அதற்கான பரிந்துரை அறிவிக்கப்பட்டன. இந்த சூழலில் வளர்ந்து வரும் வீரர் மற்றும் டி20 கிரிக்கெட் வீரருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வளர்ந்து வரும் வீரருக்கான விருதை ரச்சின் ரவீந்திரா மற்றும் டி20 கிரிக்கெட் வீரர் விருதை சூர்யகுமார் யாதவ் ஆகியோர் வென்றுள்ளனர். கடந்த 2022-க்கான சிறந்த டி20 கிரிக்கெட்டர் விருதை சூர்யகுமார் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரச்சின் ரவீந்திரா, இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் விளையாட உள்ளார். நியூஸிலாந்து அணிக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 19 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.

24 வயதான அவர் கடந்த ஆண்டு 21 ஒருநாள் இன்னிங்ஸில் விளையாடி 820 ரன்கள் குவித்தார். 3 சதம் மற்றும் 3 அரை சதம் இதில் அடங்கும். பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 18 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார்.