சென்னை: “மிகவும் நொறுங்கிப்போயிருக்கிறேன். பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும்” என பின்னணி பாடகர் பவதாரிணி மறைவுக்கு நடிகர் வடிவேலு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியுள்ள ஆடியோவில், ‘மாரிசன்’ படத்திலிருந்து இரவு ஷூட்டிங் முடிந்து வந்ததுமே இந்த அதிர்ச்சியான செய்தி என்னை அப்படியே நிலைகுலையச் செய்து விட்டது. அருமை அண்ணன் இசைஞானி அவருடைய தங்க மகள் பவதாரிணி உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு ஒன்றும் புரியவில்லை. 47 வயசு பெண். இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்துக்கொண்டாரே எனக் கதறி அழுதுவிட்டேன்.
பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல. அது ஒரு தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையோட குரல் குயில் போல இருக்கும். அவருடைய மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் அனைவரும் இன்னைக்கு நொறுங்கிப்போய் இருக்கிறார்கள். தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமானுடைய காலடியில் போய் தான் அந்த தங்க மகள் இளைப்பாருவார்கள். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். குடும்பத்தாருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் நொறுங்கிப்போயிருக்கிறேன்.
இளையராஜா அண்ணன் மனம் தைரியமாக இருக்க என்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்புசாமி என எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன். இதற்கு மேல என்னால பேச முடியலை” என அழுதபடி ஆடியோவை வெளியிட்டுள்ளார்.