தனது இசையால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டிருக்கிற இளையராஜாவின் குடும்பத்தினரும் இசைத் துறையில் இருப்பது அதிசயமில்லைதான். அப்படித்தான் பவதாரிணியும். அவர் குறைவாகப் பாடியிருந்தாலும் என்றும் நிலைத்து நிற்கும் பாடல்கள் அவை.
பிரபுதேவா நடித்த ‘ராசய்யா’ படத்துக்கு இசையமைத்த இளையராஜா, அதில்தான், பவதாரிணியை பாடகியாக அறிமுகப்படுத்தினார். இதில் அவர் பாடிய ‘மஸ்தானா மஸ்தானா’ அவரை தமிழ் சினிமாவில் ஆழமாக இழுத்துக் கொண்டது. தொடர்ந்து பாடிய அவர், ‘அழகி’யில் பாடிய ‘ஒளியிலே தெரிவது தேவதையா’, ‘காதலுக்கு மரியாதை’ படத்தில் ‘என்னை தாலாட்ட வருவாளா’, ‘ஒரு நாள் ஒரு கனவு படத்தில் ‘காற்றில் வரும் கீதமே’, ‘தாமிரபரணி’ படத்தில் ‘தாலியே தேவையில்ல’ உட்பட அவர் குரலில் வந்த பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட். ‘பாரதி’ படத்தில், ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. இப்போது கேட்டாலும் பவதாரிணியின் குரலின் இனிமையை இந்தப் பாடல்களில் உணரமுடியும்.
பவதாரிணியின் கணவர் ஆர்.சபரிராஜ். இவர்கள் திருமணம், இளையராஜாவுக்குப் பிடித்த கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலில் 2005-ம் ஆண்டு நடந்தது. தனது மனைவியைக் காப்பாற்ற கடைசி வரை போராடினார் அவரும்.
பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி, சென்னையில்தான் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பிறகு ஆயுர்வேத சிகிச்சைக்காக கடந்த ஒரு வாரத்துக்கு முன் இலங்கை சென்றார். ஆனால், புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பும் ஏற்பட்டதால் அவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அவர் உடல் இலங்கையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை கொண்டுவரப்பட்டது. தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
பவதாரிணி மறைவுக்குத் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த், பவதாரிணியின் மறைவு வருத்தம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.
நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன்: அருமைச் சகோதரர் இளையராஜாவைத் தேற்ற என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் கைகளை மானசீகமாகப் பற்றிக்கொள்கிறேன். பவதாரிணியின் மறைவு பொறுத்துக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோமுடியாத ஒன்று. இந்தப் பெருந்துயரில் என் சகோதரர் இளையராஜா மனதை இழக்காதிருக்க வேண்டும்.
ஏ.ஆர்.ரஹ்மான்: மயிலிறகாய் தமிழர் மனதையெல்லாம் வருடிய பவதாரிணியின் மதுரமான குரல் இன்றும் ஆகாயத்தில் மலர்கிறது. காற்றெல்லாம்தீரா அதிர்வெழுப்பிக் ககனவெளியெங்கும் கதிரொளியாய் விரிகிறது. இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா இந்த நேரத்தில் உங்களுடன் துணை நிற்கிறேன்.
நடிகர் விஷால்: இளையராஜாவின் மகளாகவோ, யுவனின் சகோதரியாகவோ, வாசுகியின் உறவினராகவே உன்னை அறிந்ததைவிடவும்; உடன் பிறந்த சகோதரியாகவே நினைக்கிறேன். ஒரு நல்ல உள்ளம் எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டது. கடந்த சில வாரங்களாகவே நான் விரும்பும் நபர்களை ஏன் இழக்கிறேன் என்று தெரியவில்லை.
சிம்பு: பவதாரிணியின் அந்தக் குரல் அனைத்து மக்கள் நெஞ்சங்களிலும் நிறைந்திருக்கும். இவ்வளவு சீக்கிரம் சென்றுவிடுவார் என்று நினைக்கவில்லை. இளையராஜா குடும்பத்தினருக்கு இந்த மனவலியை தாங்கும் சக்தியை, எல்லாம் வல்ல இறைவன் தர வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.
வடிவேலு: பவதாரிணி சாதாரண குழந்தை அல்ல, தெய்வக் குழந்தை. அந்தக் குழந்தையின் குரல் குயில் போல இருக்கும். அவர் மறைவு செய்தி கேட்டு உலகத் தமிழர்கள் நொறுங்கி இருப்பார்கள். தைப்பூச நாளில் தங்கை பவதாரிணி உயிரிழந்த நிலையில், அந்த முருகப்பெருமான் காலடியில் அந்த தங்க மகள் ஐக்கியமாகியிருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும். இளையராஜா தைரியமாக இருக்க எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொள்கிறேன்.
தங்கப்பன்: (இந்திய – ரஷ்ய தொழில் வர்த்தகசபை பொதுச்செயலாளர்) இளையராஜாவைப் போலவே கனிந்த மனம் கொண்டவர் பவதாரிணி. தனது அப்பாவின் இசையில் அவர் குரலுக்காவே உருவாக்கப்பட்டது போன்ற இனிய பாடல்களைப் பாடியவர். பவதாரிணிக்கு புற்றுநோய் இருந்தது என்பதை நம்ப முடியவில்லை. கடந்த ஆண்டு ரஷ்யக் கலைஞர்கள் வந்தபோது இளையராஜா வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அவர்களிடம் நடனம், இசை குறித்துக் கலந்துரையாடினார். பவதாரிணி மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பு.