சென்னை: குடமுழுக்கு விழாவையொட்டி சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் (ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயம்) 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கோயில்களில் ஒன்றாகும். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலை போன்று, அதே வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட இந்த கோயிலில் அமைந்திருக்கும் 18 படிகளும் கூடுதல் சிறப்பாகும்.
இக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் வரும் மார்ச் 27-ம் தேதி (புதன்கிழமை) 4-வது குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று காலை 10.30-ல்இருந்து 11.30 மணிக்குள் ஐயப்பன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
குடமுழுக்கு விழாவை முன்னிட்டு ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் சுவாமிகளுக்கு பாலாலயம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. மூல சன்னதியில் இருந்து ஐயப்பன் சுவாமி வெளியேகொண்டு வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து தனி கோயிலாக உள்ள விநாயகர், மஞ்சமாதா, நாகர் ஆகிய சுவாமிகளும் வெளியே கொண்டு வரப்பட்டன. சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் வரை சுவாமிகள் கருவறையில் இருந்து வெளியே இருக்கும் என்பதால், இந்நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். வெளியே கொண்டு வரப்பட்ட சுவாமிகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு, சிறப்பு பூஜையுடன் ஜண்டை மேளம் முழங்க தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பரவசத்துடன் சுவாமியே சரணம் ஐயப்பா என்று ஆர்ப்பரித்தனர்.
இதையடுத்து பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். இந்நிகழ்வில் கும்பாபிஷேக குழு தலைவர் ஏ.சி.முத்தையா மற்றும் கோயில் அறங்காவலர்கள் பங்கேற்றனர்.