சென்னை: அஜ்ர்பைஜான் நாட்டில் நடந்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்டதாகவும், அடுத்தகட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ள புதிய பகுதிக்கு படக்குழு விரைவில் செல்ல உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.
‘துணிவு’ படத்துக்குப் பிறகு அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அறிவிப்பு வெளியானபிறகும் நீண்டநாட்கள் தொடங்கப்படாமல் இருந்த இந்த படம், ஒருவழியாக அண்மையில் துபாயில் தொடங்கி, தொடர்ந்து அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
இந்த சூழலில், அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பு நடக்க உள்ள புதிய பகுதிக்கு படக்குழு விரைவில் செல்ல உள்ளதாக அஜித்தின் பிஆர்ஓ சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் சமூக வலைள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
’விடாமுயற்சி’ படத்தின் டிஜிட்டல் உரிமையை வெளியீட்டுக்கு முன்பே பெரும் தொகைக்கு நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.