IND vs ENG 2வது டெஸ்ட்: ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகல்; சர்பராஸ் கான், வாஷிங்டன் சுந்தர் சேர்ப்பு

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஜடேஜா, கே.எல்.ராகுல் விலகியுள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி கிரிக்கெட் மைதானத்தில் வரும் பிப்ரவரி 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இருந்து காயம் காரணமாக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் கே.எல்.ராகுல் விலகியுள்ளனர். ஹைதராபாத்தில் நடந்த முதல் டெஸ்டின் 4 ஆம் நாள் ஆட்டத்தின் போது ஜடேஜாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதேபோல், கேஎல் ராகுலுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது.

இருவரின் விலகலையும் உறுதிப்படுத்தியுள்ள பிசிசிஐ, இருவரின் உடல்நிலையும் மருத்துவக்குழு தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும், இவர்கள் இருவருக்கு பதிலாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் சர்பராஸ் கான், சௌரப் குமார் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய ஏ அணியில் சர்ஃபராஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில், அகமதாபாத்தில் நடந்த இரண்டாவது டெஸ்டில் சர்ஃபராஸ் 161 ரன்கள் விளாச, இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மறுபுறம், வாஷிங்டன் சுந்தர் இந்த போட்டியில் இரண்டு விக்கெட், ஒரு அரைசதம் விளாசியிருந்தார்.

2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி விவரம்: ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர், கே.எஸ்.பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, அவேஷ் கான், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார்.