‘லால் சலாம்’ சர்ச்சை | தன்யா பாலகிருஷ்ணா மீதான விமர்சனங்களும் பின்னணியும்!

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள ‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். லைகா சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் தன்யா கலந்து கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்யா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட ஒரு பதிவின் ஸ்கீர்ன்ஷாட்டை பகிர்ந்து அவரை கடுமையாக சாடிவந்தனர். அதில் அவர், “அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?” என்று எழுதியிருந்தார்.

2012ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியின்போது ஆர்சிபி அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடி அவர் போட்ட பதிவு இது. அப்போதே அவரது இந்த கருத்துக்கு கடுமையான எதிர்வினை கிளம்பியது. அதன் பிறகு அவருக்கு தமிழ் சினிமா வாய்ப்புகளும் பெரிதாக கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், தற்போது ‘லால் சலாம்’ படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கியிருப்பது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழர்களை இழிவு படுத்தி கருத்து தெரிவித்த தன்யாவுக்கு ரஜினியின் மகள் வாய்ப்பு கொடுத்தது ஏன் என்று ஒரு தரப்பினரும், பல வருடங்களுக்கு முன்னால போட்ட பதிவை வைத்து மீண்டும் ஏன் இப்படி ஒரு சர்ச்சையை கிளப்ப வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். எனினும் இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினி தரப்போ அல்லது தன்யா பாலகிருஷ்ணா தரப்போ இதுவரை வாய்திறக்கவில்லை.

'+divToPrint.innerHTML+'