நிவின் பாலியின் ‘பிரேமம்’ வியாழக்கிழமை ரீ-ரிலீஸ்!

சென்னை: நிவின்பாலி நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த ‘பிரேமம்’ மலையாளப் படம் நாளை (பிப்.1) தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

கடந்த 2015-ம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘பிரேமம்’. அன்வர் ரஷீத் தயாரித்த இப்படத்தில், மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன், கிருஷ்ணா சங்கர், சபரீஷ், வினய் போர்ட், சவுபின் ஷாஹிர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ள இப்படம் மூன்று வெவ்வேறு காலக்கட்ட காதலை பேசியது.

மலையாளம், தமிழில் வெளியான இப்படம் தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் பட்டியலில் இடம் பெற்றது. ரூ.4 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் மொத்தமாக ரூ.70 கோடி வசூலைக் குவித்தது. இந்நிலையில், இப்படம் நாளை (பிப்ரவரி 1) தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது.

இதற்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக தனுஷின் ‘3’, ஜீவாவின் ‘சிவா மனசுல சக்தி’ படங்கள் அண்மையில் ரீ-ரிலீஸ் செய்யபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.