விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் அற்புதமான அதிரடி சதத்தை எடுத்து ஆடி வருகிறார். இவருடன் அறிமுக வீரர் ரஜத் படிதார் இறங்கி ஆடி வருகிறார். முன்னதாக இங்கிலாந்து அணியில் புதிய ஆஃப் ஸ்பின்னர் சேர்க்கபட்டுள்ளார். அவர் பெயர் ஷோயப் பஷீர், வயது 20. அவர் ரோகித் சர்மா விக்கெட்டை சொல்லி வைத்து வீழ்த்தினார்.
யார் இவர்?: ஜாக் லீச் காயமடைந்ததால் அவர் இடத்தில் ஷோயப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார். ஆறு அடிக்கும் மேல் உயரம் கொண்டவர். பந்தை அந்த உயரத்திலிருந்து சுழலுக்கு இறக்குகிறார். ரோகித் சர்மா 41 பந்துகளில் 14 ரன்களை (ஒரு பவுண்டரிகூட இல்லை) எடுத்து பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். சரியாக லெக் ஸ்லிப்பைக் கொண்டு வந்து நிறுத்தி ஒரு பந்தை லெக் அண்ட் மிடிலில் பிட்ச் செய்து லேசாகத் திருப்ப ரோகித் சர்மா பிளிக் ஆட முயன்று லெக் ஸ்லிப்பில் நின்ற போப் கையில் கேட்சாக ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை திட்டமிட்டு சரியாக செயல்படுத்தி இருந்தார் ஷோயப் பஷீர்.
இந்தியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்தின் 16 வீரர்கள் கொண்ட பட்டியலில் ஷோயப் பஷீர் பெயர் சேர்க்கும் போதே பலருக்கும் ஆச்சரியம். கடந்த ஆண்டு கவுண்டி சாம்பியன்ஷிப்பில் ஷோயப் பஷீர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார். 2023 சீசனுக்கு முன்பாக சொமர்செட் அணிக்காக இவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது 6 முதல் தரப் போட்டிகளில் மட்டுமே ஆடியிருந்தார். 10 விக்கெட்டுகளை 67 என்ற மோசமான சராசரியில் எடுத்தவர்தான் இவர்.
ஆனால் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் பயிற்சி முகாம் துபாயில் நடைபெற்றபோது இவர் பந்து வீச்சு பலரையும் ஈர்த்தது. ஆப்கானிஸ்தான் ஏ அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சோஷியல் மீடியாவில் இவரது பந்துவீச்சு காட்சிகளை பார்த்த இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பெரிதும் ஈர்க்கப்பட்டார். முதல் தர கிரிக்கெட் அறிமுகப்போட்டியில் இங்கிலாந்து ஜாம்பவான் வீரர் அலிஸ்டர் குக்கிற்கு இவர் வீசியது வாட்ஸ் ஆப்பில் வலம் வர, அதை அப்படியே பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லமிற்கும், ராப் கீயிற்கும் அனுப்பியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
6 அடி 4 அங்குலம் உயரம் கொண்ட பஷீர் பந்தை ரிலீஸ் செய்யும் இடம் உயரமான இடம் என்பதுதான் அவரது சாதகம். இந்தியா வருவதற்கு முன்பாக இவருக்கு விசா வழங்குவதில் சிக்கல்கள் இருந்தது. ஹைதராபாத் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளில்தான் அவர் இந்தியா வர முடிந்தது. ஏனெனில் இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது விசா பிரச்சனை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் கவனத்தையும் கருத்தையும் ஈர்த்தது. ஏற்கெனவே ரேஹன் அகமது அணியில் இருக்கும் போது இவரையும் அணியில் சேர்ப்பது கடினம் என்பதாக இருந்த நிலை மாறி இன்று அவர் டெஸ்ட் அறிமுகம் கண்டார்.
இவரது உயரம் காரணமாக எந்த பிட்சிலும் இவர் ஸ்பின் பந்துகள் எழும்பும் என்று இவர் மீது நம்பிக்கை பிறந்திருக்கிறது. பஷீரின் இதுவரையிலான முதல் தர கிரிக்கெட் சொல்லிக்கொள்ளும் படியாக இல்லையென்றாலும் இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய வீரர்களை அறிமுகம் செய்வதில் புதியன புகுத்தியுள்ளது. இவர் நன்றாகப் பழக்ககூடிய ஒரு கேரக்டர் என்றும் கடினமாக உழைக்கக் கூடியவர் என்றும் அவரது பயிற்சியாளர் கூறுகிறார்.
கடந்த டெஸ்ட் போட்டியில் டாம் ஹார்ட்லி 7 விக்கெட்டுகளை இரண்டாவது இன்னிங்ஸில் கைப்பற்றி இந்தியாவை வீழ்த்த பெரிய பங்களிப்பு செய்த அறிமுக வீரர் ஆகத் திகழ்ந்ததால் ஷோயப் பஷீரையும் இந்திய பிட்ச்களில் முயற்சி செய்வோம் என்று இங்கிலாந்து அணி நிர்வாகம் கருதியுள்ளது. இவரும் வந்தவுடன் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்தி தான் ஒரு புத்திசாலித்தனமான ஸ்பின்னர் என்பதை நிரூபித்துள்ளார். இவரது வெற்றி போகப்போகத்தான் தெரியும்.