‘டிக்கிலோனா’ படத்துக்குப் பிறகு கார்த்திக் யோகி – சந்தானம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம். வெளியீட்டுக்கு முன்பாகவே சர்ச்சையில் சிக்கி, சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. ‘ஏ1’ படத்துக்குப் பிறகு ‘லொள்ளு சபா’ கூட்டணியான சந்தானம்,மாறன்,சேஷு மூவரும் இணைந்துள்ள இப்படமும் ஆடியன்ஸின் வெடிச் சிரிப்புக்கு உத்தரவாத தர தவறவில்லை.
வடக்குப்பட்டி என்ற கிராமத்தில் தன்னுடைய குடும்ப வறுமையால் சிறுவயதில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் பானை தொழில் செய்யும் ராமசாமி (சந்தானம்). ஊரே காட்டேரி என்று பயந்து கொண்டிருக்கும் ஒருவர் எதிர்பாராத தருணத்தில் தற்செயலாக சந்தானத்தில் பானையால் வீழ்த்தப்படுவதால், கிராம மக்கள் அந்த பானையையே அம்மனாக வழிபட தொடங்குகின்றனர். மக்களின் நம்பிக்கையை மூலதனமாக்கி, அந்த பானையை வைத்து ஒரு சிறிய கோயிலை கட்டி அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார் ராமசாமி. ஒரு கட்டத்தில் சந்தானத்தின் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அபகரிப்பதில் சந்தானத்துக்கும் அந்த ஊர் தாசில்தாருக்கும் (தமிழ்) இடையே நடக்கும் மோதலில் கோயில் சீல் வைக்கப்படுகிறது. கோயில் மீண்டும் திறக்கப்பட்டதா? இதன்பிறகு என்னவானது? என்பதை கலகலப்புடன் சொல்லியிருக்கிறது ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
சந்தானம் முழுநேர ஹீரோவாக நடிக்கத் தொடங்கிய பின் அவரது பல படங்கள் சோபிக்கவில்லை. சந்தானம் படத்துக்கு வரும் ரசிகர்கள் அவர் கருத்து சொல்வதையோ, வில்லன்களை அடித்து துவம்சம் செய்வதையோ, ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்வதையோ தாண்டி படத்தின் நான்கு இடங்களில் விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் அளவுக்கான காமெடி காட்சிகளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். அதனை முழுமையாக நிறைவேற்றிய படங்கள் என்றால் ‘ஏ1’, ‘தில்லுக்கு துட்டு’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ ஆகிய படங்களை சொல்லலாம். காரணம் அந்த படங்களில் காமெடி காட்சிகளை தாண்டி ஒரு நல்ல கதையும், அதற்கான சுவார்ஸ்யமான திரைக்கதையும் இருந்தது. மேலும் அவற்றில், சந்தானம் படம் முழுக்க தான் மட்டுமே ஸ்கோர் செய்யாமல் தன்னோடு நடிக்கும் மற்ற கதாபாத்திரங்களுக்கும் போதுமான ஸ்பேஸ் கொடுத்திருப்பார். அந்த வரிசையில் தற்போது ’வடக்குப்பட்டி ராமசாமி’யும் இணைந்துள்ளது என்று தாராளமாக சொல்லலாம்.
படத்தின் முதல் பாதி முழுக்கவே வெடிச்சிரிப்புக்கான தருணங்கள் ஏராளம் உண்டு. குறிப்பாக சந்தானம்,சேஷு,மாறன் கூட்டணி தங்கள் கிராமத்துக்கு ‘மெட்ராஸ் ஐ’ நோயை பரப்புவதற்காக ராணுவ மேஜரான நிழல்கள் ரவியின் வீட்டுக்குள் நுழையும் காட்சிகள் அதகளம். சற்றே நீண்ட காட்சியாக இருந்தாலும், கலகலப்புக்கு பஞ்சமில்லை. படம் தொடங்கியது முதல் இடைவேளை வரை, எந்த இடத்திலும் தொய்வின்றி சுவாரஸ்யமாகவே படம் செல்கிறது. சந்தானம், மாறன், சேஷு கூட்டணி தவிர்த்து ரவிமரியா, ஜான் விஜய், கூல் சுரேஷ், நிழல்கள் ரவி என ஒவ்வொருவரும் கதையின் நகர்வுக்கு உதவுகின்றனர்.
குறிப்பாக நிழல்கள் ரவி சீரியஸாக பேசும் காட்சிகள் எல்லாம் நமக்கு குபீர் சிரிப்பை வரவழைக்கும் அளவுக்கு அவரது பாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எம்.எஸ்.பாஸ்கர் பாத்திரம் மட்டுமே சற்றே குழப்பக்கூடியதாக உள்ளது. ஒரு இடத்தில் காமெடியாக காட்டப்படும் அவரது பாத்திரம் வேறொரு இடத்தில் சீரியஸாக பேசுவது குழப்புகிறது. மேகா ஆகாஷ் கொடுக்கப்பட்ட பாத்திரத்துக்கு நியாயம் செய்கிறார். இரண்டாம் பாதியில் சில காட்சிகளே வந்தாலும் மொட்டை ராஜேந்திரனும் அவரது கேங்-கும் வரும் காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது.
படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியின் இறுதியில் தொடங்குகிறது, அதுவரை காமெடி டிராக்கில் பயணித்த படம் திடீரென சீரியஸ் மோடுக்கு மாறுவது ஒட்டவில்லை. பக்தி, முன்னோர்கள், நம்பிக்கை என எங்கெங்கோ சென்று பக்திப் படமாக மாற்றி ஒருவழியாக முடிக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. அதே போல வடக்குப்பட்டிக்கும் தெக்குப்பட்டிக்கும் இடையே இருக்கும் பிரச்சினை என்ன என்பதில் தெளிவில்லை.
ஷான் ரோல்டனின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. தீபக்கின் ஒளிப்பதிவு, சிவனாண்டீஸ்வரனின் எடிட்டிங், ராஜேஷின் கலை இயக்கம் என தொழில்நுட்ப அம்சங்கள் எதுவும் குறையில்லை.
காமெடி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு, அதையே சாக்காக வைத்துக் கொண்டு அடிப்படையான திரைக்கதை கூட இல்லாமல் நகைச்சுவை என்ற பெயரில் அபத்தங்களுடன் வெளியாகும் படங்களுக்கு மத்தியில் ஓரளவு சுவாயஸ்மாக நகரும் திரைக்கதையுடன், பல இடங்களில் வெடித்துச் சிரிக்க உத்தரவாதம் தருகிறது ‘வடக்குப்பட்டி ராமசாமி’.