“பிரதமர் மோடியை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது” – ரோஹன் போபண்ணா ட்வீட்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றிருந்தார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அதிக வயதுடைய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

“பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது மிகவும் அரிதானது. என்னை உலக நம்பர் 1 வீரராகவும், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகவும் வழிவகுத்த ராக்கெட்டினை வழங்குவதில் பெருமை. உங்களது பண்பு எனக்கு அதீத ஊக்கம் தருகிறது” என ரோஹன் போபண்ணா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006 முதல் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ரோஹன் போபண்ணா விளையாடி வருகிறார். கடந்த 2017-ல் கலப்பு இரட்டையர் பிரிவில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருந்தார். இந்த சூழலில் முதல் முறையாக ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர் பட்டம் வென்றார். அவரது இந்த சாதனைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

கடந்த வாரம் போபண்ணா பட்டம் வென்ற நிலையில் பிரதமர் மோடி அவரை வாழ்த்தி இருந்தார். பிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தது, “மீண்டும் ஒருமுறை, வயது தடையல்ல என்பதை அபார திறமை கொண்ட ரோஹன் போபண்ணா காட்டியுள்ளார். வரலாற்று சிறப்புமிக்க ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு வாழ்த்துகள். எப்போதும் தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியே நமது திறமைகளை வரையறுக்கிறது என்பதற்கு அவரது சிறப்புமிக்க பயணம் ஒரு அழகான நினைவூட்டல். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.