சென்னை: மணிகண்டன் நடித்துள்ள ‘லவ்வர்’ (Lover) படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள படம் ‘லவ்வர்’ (lover). ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்ட்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – படம் முழுவதும் காதலை மையப்படுத்தி உருவாகியுள்ளது தெரிகிறது. இருவரும் சேர்ந்திருப்பதைக் காட்டிலும், அவர்களின் பிரிவும், சண்டையுமே முதன்மையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான தமிழ் சினிமா படங்களைப் போல நாயகன் ‘புனிதர்’ஆகவும், நாயகியை எதிர்தரப்பில் சித்தரிக்கும் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கிறது.
‘காசுக்குத்தான் மரியாதை; லவ்லாம் சும்மா’ என்ற நாயகனின் வசனம் மூலம் பெண்கள் பணத்துக்காக பழகுகிறவர்கள் என்பதை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறது தமிழ் சினிமா. மேலும் இது புளித்துப்போன வசனமாக இருந்தாலும் இன்றும் இந்த வசனம் இடம்பெற்றிருப்பதற்கான காரணம் அண்மையில் ஹிட்டான ‘லவ் டூடே’ போன்ற டாக்சிக் படங்கள் கொடுத்த நம்பிக்கையே.
மொத்த ட்ரெய்லரின் நாயகன் குடித்துக்கொண்டு, சிகரெட் பிடித்துக்கொண்டும், அடாவடித்தனமாகவும், நாயகியை துரத்தி மிரட்டி மீண்டும் காதலிக்க வற்புறுத்தும் கதாபாத்திரமாக காட்டபடுகிறார். கிட்டத்தட்ட ‘சைக்கோ’ காதலன் கதாபாத்திரம். நாயகி மற்ற ஆண் நண்பருடன் பழகுவதாகவும், நாயகன் ‘தூய’ ஆத்மா போலவும், ‘எத்தன தடவடி என்கிட்ட பொய் சொல்லிட்டு போயிருக்க. என்ன பாத்தா எப்டி டீ தெரியுது உனக்கு’ என கேட்கிறார். மீண்டும் நாயகியை குற்றப்படுத்தும் காட்சி.
இறுதியில் ‘சாரி கேட்டு மீண்டும் தன்னை ஏற்றுகொள்ளும்படி கோருகிறார் நாயகன். எல்லா தவறையும், டாக்சிக் மனநிலையையும் கொண்ட ஆண்களை மீண்டும் மீண்டும் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லாத பட்சத்தில் அவர்கள் கெட்டவர்களாக சித்தரிக்கும் போக்கையும் வெளிப்படுத்தும் விதமாக ட்ரெய்லர் உள்ளது. இது ட்ரெய்லர் தான் என்றாலும் டீசரும் கூட இதே ரகத்தில் இருந்தது. படம் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. ட்ரெய்லர் வீடியோ: