2-வது குழந்தையை வரவேற்க தயாராகும் கோலி – அனுஷ்கா: டி வில்லியர்ஸ் தகவல்

புதுடெல்லி: விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. இவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை. விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட்டுக்கான அணியிலும் விராட் கோலி இடம்பெறவில்லை. அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரில் இருந்து விலகியுள்ளார் என்று மட்டும் பிசிசிஐ தெரிவித்தது. விராட் கோலி என்ன காரணத்துக்காக இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்பது ரசிகர்களிடம் விவாதமாக மாறியது. ஒருகட்டத்தில் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்பதால் விராட் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை என்று தகவல் வெளியானது.

சில நாட்கள் முன் இதனை மறுத்த விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி, “என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை. எங்கள் தாயார் நலமாக உள்ளார். எனவே, யாரும் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்” என்று விளக்கமளித்தார்.

இந்நிலையில், விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். யூடியூப் சேனலில் விராட் கோலி குறித்த ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசிய ஏபி டி வில்லியர்ஸ், “விராட் கோலி நன்றாக இருக்கிறார். விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் தங்களுக்கு இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர். அதனால் தான் தனது குடுமபத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

பெரும்பாலானவர்களின் முன்னுரிமை குடும்பம் என்று நான் நினைக்கிறேன். அதனால், விராட் கோலியை தவறாக மதிப்பிட கூடாது” என்று கூறியிருக்கிறார். விராட் கோலியுடன் சமீபத்தில் பேசிய நிகழ்வை சொல்லும்போது இரண்டாவது குழந்தை பிறக்க இருப்பதை டி வில்லியர்ஸ் வெளிப்படுத்தினார்.

விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதி 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாமிகா என்ற மூன்று வயது குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.