“விஜய்யை பற்றி பண்ண விரும்பவில்லை விமர்சனம்… தமிழக மக்களுக்கு வேண்டும் விமோச்சனம்” – டி.ராஜேந்தர்

சென்னை: “அரசியல் என்பது பொதுவழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி பண்ண விரும்பவில்லை ‘விமர்சனம்’, நான் கடவுளிடம் கேட்பது தமிழக மக்களுக்கு விமோச்சனம்” என இயக்குநர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் நடிகர் விஜய் வெள்ளிக்கிழமை புதிய கட்சி தொடங்கியுள்ளார். நெருங்கி வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ள விஜய், 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்துள்ளார். பல அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இயக்குநர் டி.ராஜேந்தர் இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடத்தில் பேசியது: “அரசியல் என்பது பொதுவழி. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். விஜய்க்கு வாழ்த்துகள். அவரைப் பற்றி இந்த நேரத்தில் பண்ண விரும்பவில்லை ‘விமர்சனம்’, நான் கடவுளிடம் கேட்பது தமிழக மக்களுக்கு ‘விமோச்சனம்’.

மறைந்த முதல்வர் கலைஞர் என்னை திரும்பவும் திமுகவில் சேர்க்க நினைத்தார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவை விட்டு பிரிந்து சென்ற பிறகு அவரை கூப்பிட்டாரா… ஆனால் கலைஞர் என்னை அழைத்தார், என்னுடைய பிரச்சாரத்துக்கு ஒரு வேல்யூ இருக்கிறது என்று அவர் நினைத்தார். எல்லாருக்கும் எல்லாரோட வேல்யூவும் தெரியாது. என்னுடைய வேல்யூ கலைஞர் கருணாநிதிக்கு தெரிந்தது, மறைந்த புரட்சித் தலைவி அம்மாவுக்கு தெரிந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஓபிஎஸ் என்னை தேர்தல் களத்துக்கு வருமாறு அழைத்தார், கூட்டணிக்கு வருமாறு அழைத்தார்.

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் என்னை நிற்க சொன்னார்கள். நான் ஒரே ஒரு டயலாக் சொன்னேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் ஆக இருந்த நான், எப்படி ஒரு இரட்டை இலை சின்னத்தில் நிற்க முடியும், அதை நான் விரும்பவில்லை என்று கூறினேன். என்னுடைய லட்சியம், கொள்கைக்காக வாழ வேண்டும் என்று எனக்கு ஓர் இலக்கு இருக்கிறது” என்றார்.