விசாகப்பட்டினம்: டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 499-வது விக்கெட்டை வீழ்த்தினார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின். விசாகப்பட்டினத்தில் நடந்துமுடிந்த இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் விக்கெட்டை வீழ்த்தி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 499-வது விக்கெட்டை பதிவு செய்தார் அஸ்வின்.
இதன்மூலம் ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட் வீழ்த்திய பவுலர் எனும் சாதனையை எட்டும் வாய்ப்பை எதிர்நோக்கி உள்ளார். அஸ்வின் இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 499 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். 500 விக்கெட்கள் என்ற மைல்கல்லை அவர் எட்டுவதற்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவை என்ற நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அந்த வாய்ப்பு நழுவியது.
ஏற்கெனவே இன்றைய போட்டியில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார் அஸ்வின். இதனால், இன்றைய விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியிலேயே 500 டெஸ்ட் விக்கெட் என்ற சாதனையை எட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ், முகேஷ்குமார் இணைந்து மற்ற விக்கெட்களை வீழ்த்த அஸ்வினுக்கு அந்த வாய்ப்பு நழுவியது. எனினும், ராஜ்கோட்டில் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் 500 விக்கெட் என்ற சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாதனையை படைப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 500+ விக்கெட்களை வீழ்த்திய ஒன்பதாவது பவுலர் என்ற சாதனையை அஸ்வின் படைப்பார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், அனில் கும்ப்ளே, லயன் போன்ற சுழற்பந்து வீச்சாளர்கள் இந்த சாதனையை இதற்கு முன்னர் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
37 வயதான அஸ்வின், கடந்த 2011 முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அதோடு 3,129 ரன்களை பதிவு செய்துள்ளார். ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 பவுலராகவும், ஆல்ரவுண்டர்களில் 2-வது இடத்திலும் அஸ்வின் உள்ளார். மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரான இந்த டெஸ்ட் தொடரில் அஸ்வின் அடுத்து நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டுவார் எனத் தெரிகிறது.