மும்பை: அட்லீ தயாரிக்கும் பாலிவுட் படத்துக்கு ‘பேபி ஜான்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஷாருக்கானை வைத்து இயக்கிய ‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் அழுத்தமான ‘என்ட்ரி’ கொடுத்தார் இயக்குநர் அட்லீ. இப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்து வரவேற்பை பெற்றது. இதையடுத்து, தற்போது பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். வருண் தவான், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஜனவரி 14-ம் தேதி பூஜையுடன் தொடங்கின. இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார். அட்லீயின் மனைவி ப்ரியாஅட்லீ படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் நாயகியாக கால்பதிக்கிறார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் தலைப்பையும், அறிமுக வீடியோவையும் அட்லீ தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்துக்கு ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படம் விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ படத்தின் இந்தி ரீமேக் என கூறப்பட்டது. ஆனால், படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அறிமுக வீடியோவில் ‘தெறி’ படத்துக்கான சாயல் தென்படவில்லை. படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு வீடியோ: