கலிபோர்னியா: சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ போன்றவை ஜெனரேட் செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. சமயங்களில் இது சர்ச்சைக்கும் வழிவகுக்கிறது.
இந்த சூழலில் AI மூலம் ஜெனரேட் செய்த படங்களை அடையாளப்படுத்தும் விதமாக இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதனை குறிப்பிட மெட்டா திட்டமிட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்றும் தகவல். முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டது போலவும், போப் ஆண்டவர் வெள்ளை நிற ஜாக்கெட்டை அணிந்திருப்பது என ஏஐ மூலம் ஜெனரேட் செய்த படங்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது. இது டீப்ஃபேக் என அறியப்படுகிறது.
இந்த சூழலில் மெட்டா நிறுவனம் இந்த முடிவை முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் சமூக வலைதள பயனர்கள் ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்பட்ட படம் மற்றும் அசல் படங்களுக்கு இடையிலான வித்தியாசத்தை அடையாளம் காணலாம்.
கூகுள், மைக்ரோசாப்ட், ஓபன் ஏஐ, அடாப், மிட் ஜெர்னி, ஷட்டர்ஸ்டாக் போன்ற நிறுவனங்களின் ஏஐ டூல் மூலம் ஜெனரேட் செய்யப்படும் படங்களுக்கு பொருந்தும் என மெட்டா தெரிவித்துள்ளது. இருந்தாலும் வாட்டர் மார்க்ஸ் மற்றும் பிற தொழில்நுட்ப மெட்டா டேட்டாவை சேர்க்கத் தொடங்கினால் மட்டுமே சாத்தியம் என தெரிகிறது. மேலும், வாட்டர் மார்க்ஸ் இல்லாத படங்களில் அதை அடையாளம் காண்பதற்கான டூலை இன்ஸ்டா, ஃபேஸ்புக் தளங்களில் சேர்க்கவும் மெட்டா திட்டமிட்டுள்ளது.
இருந்தும் இந்த நடைமுறை ஏஐ மூலம் ஜெனரேட் செய்யப்படும் ஆடியோ மற்றும் வீடியோவை லேபிள் செய்வது இப்போதைக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.