விஜய் தனது அரசியல் என்ட்ரியை அதிகாரபூர்வமாக தற்போது அறிவித்திருந்தாலும், அதற்கு முன் தனது படங்களின் மூலம் அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அப்படி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விஜய் படங்களில் பேசிய அரசியலைப் பார்ப்போம்.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது ‘தலைவா’. ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கியிருந்தார். ‘அரசியல் என்ட்ரி’க்கான விதையை அழுத்தமாக தூவியிருந்தார். காரணம் ‘தலைவா’ என்ற டைட்டில் என்பதைத் தாண்டி ‘டைம் டூ லீட்’ என்ற லீட்தான். ஆனால் அந்த லீட் கொடுத்ததற்காக ‘லீடர்’களின் முன் ரிலீஸுக்காக நிற்கவேண்டிய சம்பங்களும் நடந்தன. இந்தப் படத்தில் சத்யராஜுக்குப் பிறகு யார் என்ற கேள்வி எழும். முன்னதாக சத்யராஜ் கதாபாத்திரம் அறிஞர் அண்ணாவை காட்சியப்படுத்தியிருந்ததாக பல கருத்துகள் எழுந்தன. அவருக்குப் பின் அந்த இடத்தை விஜய் நிரப்புவதாக காட்டப்பட்டிருக்கும். குறிப்பாக ‘பிறர் துன்பம் தன் துன்பம் போல் எண்ணினால், வரலாற்றில் ஒரு தலைவன் உருவாகுவான்’ என்ற பாடல் வரி படத்தின் நோக்கத்தை வெளிப்படுத்தியிருக்கும்.
அதன் பிறகு வந்த விஜய்யின் ‘ஜில்லா’ வெகுஜன சினிமா பாணியில் இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸை வைத்து விஜய் தீட்டிய ‘கத்தி’ படம் திமுகவை குத்தியிருந்தது. ‘காத்துல ஊழல் பண்ற ஊருயா’ இது 2ஜி ஊழலை வெளிப்படையாக விமர்சித்து இறங்கி அடித்திருப்பார் விஜய். அப்போது 2ஜி ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய காங்கிரஸ் அரசாங்கம் தோல்வியுற்று, நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் வென்றிருந்த சமயம். தமிழகத்திலும் அதிமுக ஆளும் கட்சி. தவிர, விவசாயிகள் பிரச்சினை, கார்ப்பரேட் அரசியல், ஒற்றைவரி கம்யூனிச விளக்கம் என ‘கத்தி’ அதன் அரசியலால் ஷார்ப்பாக இருந்தது.
‘புலி’ படத்தை எந்த வகையறாவிலும் சேர்க்க முடியாது என்பதால் ஸ்கிப் பண்ணிவிடலாம். ‘தெறி’ பழிவாங்கும் கதையாக கமர்ஷியல் தளத்தில் வென்றது. ‘பைரவா’ தனியார் கல்வி நிறுவனங்களை விமர்சித்தது. அதுவரை ‘இளையத் தளபதி’ என்ற அடைமொழியுடன் வரும் விஜய்யின் பெயர் ‘மெர்சல்’ படத்தில் ‘தளபதி’ என மாற்றம் கண்டிருந்தது. தனியார் மருத்துவமனைகள் மீதான விமர்சனத்தைப் பேசிய ‘மெர்சல்’, மோடி அரசின் ஜி.எஸ்.டி திட்டத்தை நேரடியாக விமர்சித்ததாக சர்ச்சை எழுந்தது. பாஜகவினரும் படத்துக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து மீதியிருக்கும் ‘அதிமுக’வை விமர்சிக்க ஏ.ஆர்.முருகதாஸுடன் விஜய் கைகோத்த படம் ‘சர்கார்’. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரான ‘கோமளவல்லி’ பெயரை வில்லி கதாபாத்திரத்துக்கு சூட்டியதிலிருந்து இலவசங்களை விமர்சித்தது வரை அதிமுக உள்ளிட்ட திராவிட கட்சிகளை விமர்சித்தது படம். இலவசங்கள் குறித்த புரிதலற்ற தன்மை என படத்துக்கு எதிரான கண்டனங்கள் வலுத்தன. அதிலும் குறிப்பாக சுகாதாரத் துறைக்கு பதிலாக பொதுப் பணித்துறையை குறிப்பிட்டிருந்த காட்சிகள் நகைப்புக்குள்ளாகியிருந்தன. ‘சர்கார்’க்கான ஆசை இருந்தால் மட்டும்பத்தாது அது தொடர்பான அரசியல் புரிதலும் தேவை என கருத்துகள் எழுந்தன.
இதையெல்லாம் தாண்டி உருவகேலிக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிரான விஜய்யின் படங்கள் தான் விமர்சிக்கப்படவேண்டியவை. காரணம் தன்னுடைய படத்தின் கருத்துகள் மூலம் ஆயிரக்கணக்கான மக்களை சென்று சேரும் ‘மாஸ்’ நடிகரான விஜய், ‘பிகில்’ படத்தில் உருவகேலிக்கு ஆதரவாக ‘குண்டம்மா’ என பேசியிருந்தது பலரையும் காயப்படுத்தியது. பின்னர் அதற்கான விளக்க வார்த்தைகளால் எந்த பயனுமில்லை. ஆனால், ‘மாஸ்டர்’ படத்தில் பெண்களின் ஆடைச் சுதந்திரம்தான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என கூறும்போது, அதற்கு எதிராக கொதித்தெழுந்து விஜய் பேசும் வசனங்கள் பாராட்டுக்குரியவை. இந்த புரிதல்தான் அரசியலிடம் அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பவை.
ஆனால், மீண்டும் ‘வாரிசு’ சறுக்கியிருந்தார். அப்படத்தில் அவரது அண்ணன் மகளை ரவுடிகள் சிலர் கடத்திச் சென்றிருப்பார்கள். அவர்களை விஜய் தேடிச்செல்லும் இடம் ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதி. அதுவும் அந்த கடத்தல் கும்பலின் தலைவன் ஒரு கிறிஸ்துவராக காட்சிப்படுத்தப்பட்டிருப்பார். முன்னதாக ‘பீஸ்ட்’ படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதும், ‘துப்பாக்கி’ படத்தில் ஸ்லீப்பர் செல்கள் என முஸ்லிம்களுக்கு முத்திரை குத்தியிருந்ததும் விஜய்யின் அரசியல் புரிதலின் வறட்சியை காட்டுகிறது.
எல்லாவற்றையும் விட்டுவோம். 2024 இந்த காலக்கட்டத்தில் அதாவது விஜய் அரசியல் என்ட்ரிக்கு சில மாதங்களுக்கு முன்னால் வெளியாகிறது ‘லியோ’. கிறிஸ்தவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய், கிறிஸ்துவ மதத்தில் நரபலி கொடுப்பதையும் (!?), கிறிஸ்துவர்கள் ஜாதகம் பார்ப்பதையும், எந்த அடிப்படையில் அனுமதித்திருப்பார் என எத்தனை முறை யோசித்தாலும் புரியவில்லை. இந்திய சூழலில் சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் தருணத்தில், ‘பீஸ்ட்’, ‘வாரிசு’, ‘லியோ’ பேசிய அரசியல் ஆபத்தானது.
இறுதியாக ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், “நான் இப்படத்தில் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை; முதல்வர் ஆனால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால், எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்” என பேசியிருந்தார். சொன்னபடி அரசியலுக்கு வந்துவிட்டார். அரசியல் புரிதலோடு அடுத்து களம் காணுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.