பாரீஸ்: விளையாட்டு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் தொடங்க உள்ளது. இந்த சூழலில் பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தில் ஈஃபிள் டவரின் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த சுவாரஸ்ய தகவலை பாரீஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்கள் பகிர்ந்து உள்ளனர்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களும், வீராங்கனைகளும் எதிர்வரும் பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் முனைப்புடன் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 329 விளையாட்டு ஈவென்ட்கள் இதில் நடத்தப்பட உள்ளது. சுமார் 10,500 பேர் இதில் போட்டியாளர்களாக பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டினை ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்த சூழலில் பதக்கம் குறித்து சுவாரஸ்ய தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக ஒலிம்பிக் பதக்கத்தின் உருவாக்கத்தில் புதுமையை கடைபிடிக்க போட்டியை நடத்தும் நாடுகள் முற்படும். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்திய ஜப்பான் நாடு, பயன்படுத்தப்பட்ட பழைய மொபைல் போன்களை கொண்டு பதக்கங்களை உருவாக்கியது. அது போல பிரான்ஸ் என்றதும் உலக மக்கள் அனைவருக்கும் சட்டென நினைவில் வரும் ஈஃபிள் டவரின் உலோகத்தை தற்போது பதக்கத்தில் பயன்படுத்தி உள்ளது அந்நாடு.
பதக்கத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாரீஸ் ஒலிம்பிக் பதக்கத்தின் மையப்பகுதியில் ஈஃபிள் டவரின் உலோகம் ஹெக்சகன் வடிவில் இடம் பெற்றுள்ளது. பார்க்க நம் நாட்டின் 10 ரூபாய் நாணயம் போல உள்ளது. இது கடந்த காலங்களில் ஈஃபிள் டவரை புதுப்பிக்கும் பணி மேற்கொண்ட போது எடுத்த உலோகம் என்றும். அது சேமிப்பு கிடங்கில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதக்கதின் மற்றொரு பக்கத்தில் நவீன ஒலிம்பிக்கின் தொடக்கத்தை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.