“உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம்” – சத்யா நாதெள்ளா

பெங்களூரு: கடந்த 2022 முதல் உலக மக்கள் மத்தியில் ஏஐ குறித்த டாக் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம் என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளா பேசியுள்ளார்.

பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்ற டெவலப்பர்களுக்கான நிகழ்வு ஒன்றில் அவர் இதனை தெரிவித்தார். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஏஐ டூர் நிகழ்வில் ஒன்றாக இது அமைந்தது. “நாம் புரிந்து கொள்வதற்கு மாறாக நம்மை புரிந்துக் கொள்ளும் கணினிகளை வடிவமைக்க வேண்டும். பயனர்கள் உரையாடும் வகையில் அது இருக்க வேண்டும் என சொல்வோம். இப்போது நாம் அந்த நெடுநாள் ஆசையை மெய்பிக்கும் தருணத்தில் வாழ்ந்து வருகிறோம்.

ஏஐ சார்ந்த டூல்கள் மூலம் இந்தியா மற்றும் உலக மக்கள் மேம்பாடு காண வேண்டும். அதன் மூலம் அவர்களது சக்சஸ் ரேட் கூட்டப்பட வேண்டும். நமது விரல் நுனியில் வெறும் தகவல் மட்டுமல்லாது அதில் நிபுணத்துவம் கொண்டவராக இருக்க ஏஐ உதவும். இந்தியாவில் ஏஐ சார்ந்த உள்கட்டமைப்பு பணிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வலுவாக மேற்கொண்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கோபைலட் ஜெனரேட்டிவ் ஏஐ டூல் சேவை மூலம் டெவலப்பர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்-அப்கள் வடிவமைத்த ஏஐ பாட் பயன்பாடு குறித்து இதில் சுட்டிக்காட்டப்பட்டது. குறிப்பாக இந்தியாவின் கிராமப்புறங்களில் இதன் பயன்பாடு குறித்து விவரிக்கப்பட்டது. ஆசியர்களுக்கு உதவும் சிக்‌ஷா ஏஐ, வங்கிக் கணக்கு தொடங்க உதவும் கார்யா ஏஐ போன்றவற்றின் பயன்பாடுகள் இதில் விவரிக்கப்பட்டன.