2-வது குழந்தை குறித்த தகவல்: விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரிய டி வில்லியர்ஸ்

புதுடெல்லி: விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று சில தினங்களுக்கு முன்பு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் கூறியிருந்த நிலையில், உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரிவித்ததற்காக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக தற்போது அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் அண்மையில் தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட ஒரு காணொலியில், விராட் கோலியும் அனுஷ்கா ஷர்மாவும் இரண்டாவது குழந்தையை வரவேற்க தயாராகியுள்ளனர் என்று கூறியிருந்தார். பின்னர் மறுநாள் மற்றொரு காணொலியில் இந்த தகவலை அவரே மறுத்திருந்தார்.

இந்த நிலையில், தனது யூடியூப் நேரலையில் பேசிய ஏபி டி வில்லியர்ஸ் உறுதிப்படுத்தப்படாத தகவலை தெரிவித்ததற்காக விராட் கோலி குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசும்போது, “கோலிக்கு தேவையான அவருடைய ப்ரைவசியை வழங்குமாறு அனைவரிடமும் நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். குடும்பம்தான் முதலில். நாம் அனைவரும் அதை மதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய முந்தைய நிகழ்ச்சியில் நான் ஒரு மிகப்பெரிய தவறை செய்துவிட்டேன். அதற்காக கோலி குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். உறுதிப்படுத்தப்படாத தகவலை நான் பகிர்ந்து கொண்டது சரியல்ல.

எனக்கு தெரிந்ததெல்லாம் அவர் நலமுடன் இருக்கிறார் என்பது மட்டுமே. அவர் தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிடுகிறார், அதனால்தான் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. வேறு எதையும் நான் உறுதிப்படுத்தப் போவதில்லை. அவரை மீண்டும் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் நன்றாக இருக்கிறார், மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கடைசி 3 போட்டியிலும் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.