டி20-ல் அதிக சதங்கள்: ரோகித் சர்மா சாதனையை சமன் செய்த கிளென் மேக்ஸ்வெல்!

அடிலெய்டு: அடிலெய்டில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான 2வது டி20 சர்வதேசப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன், சிக்சர் ஜெயண்ட் கிளென் மேக்ஸ்வெல் 12 பவுண்டரிகள் 8 சிக்சர்களுடன் 55 பந்துகளில் 120 ரன்களை விளாசி தனது 5-வது டி20 சதத்தை எடுத்ததன் மூலம் ரோகித் சர்மாவின் டி20 சதங்கள் எண்ணிக்கை சாதனையைச் சமன் செய்தார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 241 ரன்களைக் குவிக்க மே.இ.தீவுகள் அணி 207 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை மே.இ.தீவுகள் 0-2 என்று இழந்தது.

ஆஸ்திரேலியா குவித்த 241 ரன்கள் சொந்த மண்ணில் டி20-யில் அவர்களின் அதிகபட்ச ஸ்கோராகும். மே.இ.தீவுகள் கேப்டன் ரோவ்மேன் போவெல் 36 பந்துகளில் எடுத்த பிரமாதமான 63 ரன்கள் தவிர ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த இமாலய டி20 இலக்கு மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே முடிந்தது.

கிளென் மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 120 ரன்களை விளாசி அதிரடி மன்னன் டிம் டேவிட்டின் 31 ரன்கள் உதவியுடன் அவருடன் 92 ரன்கள் கூட்டணி அமைக்க ஆஸ்திரேலியா 241/4 என்ற பெரிய ஸ்கோரை எட்டியது. மே.இ.தீவுகள் அணி இலக்கைத் துரத்திய போது முதல் 7 ஓவர்களிலேயே 5 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. கேப்டன் போவெல் 36 பந்துகளில் 63 ரன்களையும், ஃபார்மைத் தேடிக்கொண்டிருக்கும் ஆந்த்ரே ரஸ்ஸல் 16 பந்துகளில் 37 ரன்களையும் விளாச 207 ரன்கள் வரை வர முடிந்தது. மார்கஸ் ஸ்டோய்னிஸ் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைச் சாய்க்க அறிமுக பவுலர் ஸ்பென்சர் ஜான்சன் 39 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

டாஸ் வென்ற போவெல் முதலில் ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்து தவறு செய்தார். ஏனெனில் இந்த மைதானம் ஒரு பேட்டிங் பாரடைஸ். இருப்பினும் ஜோஷ் இங்க்லிஸ் (4), மிட்செல் மார்ஷ் (29- 3 பவுண்டரி 2 சிக்சர், 12 பந்து), டேவிட் வார்னர் (22 ரன்கள்- 3 பவுண்டரி 1 சிக்சர், 19 பந்துகள்) ஆகியோர் விக்கெட்டுகளை 6.4 ஓவர்களில் ஸ்கோர் 63 ஆக இருந்த போது இழந்தது ஆஸி. அதன் பிறகுதான் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு கிளென் மேக்ஸ்வெல் விக்கெட்டை வீழ்த்த உத்திகள் கைகூடவில்லை. மேக்ஸ்வெலை நிறுத்த முடியவில்லை. முதலில் 5 பந்துகளில் 4 என்றுதான் மெதுவாக ஆரம்பித்தார் மேக்ஸ்வெல்.

ஆனால் அதன் பிறகு அசாதாரண ஷாட்களை அவர் கட்டவிழ்த்துவிட பவுண்டரி மழை பொழிந்தது. ஸ்டோய்னிஸ் 15 பந்துகளில் 16 ரன்களையே எடுத்தாலும் அதற்குள் மெக்ஸ்வெலின் அதிரடியினால் 82 ரன்கள் கூட்டணி அமைந்தது. டிம் டேவிட்டுடன் 92 ரன்கள் கூட்டணி அமைத்தார் மேக்ஸ்வெல். இதில் ஆந்த்ரே ரஸ்ஸலை கடைசி ஓவரில் புரட்டி எடுத்து 25 ரன்களை விளாசித் தள்ளினர். மேக்ஸ்வெல் 50 பந்துகளில் கண்ட டி20 சதம், இதற்கு முன்னர் ஆஸ்திரேலிய மண்ணில் தென் ஆப்பிரிக்க அதிரடி மன்னன் ரைலி ரூசோ எடுத்த 52பந்து சதமே அதிவேக சத சாதனையாக இருந்தது. ரைலி ரூசோவ் 2022 டி20 உலகக்கோப்பையில் வங்கதேசத்திற்கு எதிராக இந்த சதத்தை விளாசினார்.

முதல் போட்டியில் ஹோபார்ட்டில் ஆஸ்திரேலியா 11 ரன்களில் வெற்றி பெற்றது. பெர்த்தில் நாளை, செவ்வாய்க்கிழமை 3வது டி20 போட்டி நடைபெறுகிறது, இதில் வெஸ்ட் இண்டீஸ் ஆறுதல் வெற்றி பெறுமா என்பதைப் பார்க்க வேண்டும்.