அபுதாபி: “எந்த முன்முடிவும் இல்லாமல் படத்தைப் பார்க்க வாருங்கள். இப்படம் புதிய திரையனுபவமாக இருக்கும்” என நடிகர் மம்மூட்டி ‘பிரமயுகம்’ படம் குறித்து பேசியுள்ளார்.
மம்மூட்டி நடிப்பில் வரும் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘பிரமயுகம்’ மலையாளப்படம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அபுதாபியில் நேற்று (பிப்.11) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மம்மூட்டி “இந்தப் படத்தை பார்க்க விரும்பும் உங்களிடம் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். படத்தின் ட்ரெய்லர் உங்களுக்குள் நிறைய கணிப்புகளை உருவாக்கியிருக்கலாம். படத்தின் கதை குறித்த எந்த முடிவுக்கும் வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது என்பதால் இதைச் சொல்கிறேன். படத்தின் கதை உங்களின் அனுமானங்களைத் தாண்டி வேறொன்றாக இருக்கும். எந்த ஒரு முன்முடிவு கருத்துகளையும் வைத்துக்கொண்டு படத்தை பார்க்காதீர்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் படத்தை பார்க்க வாருங்கள்.
ஒருவேளை அந்தக் கணிப்புகள் உண்மையாகும்போதும், அது உங்களின் திரையனுபவத்தை முழுமையாக பாதிக்கும். மலையாளத்தின் புதிய தலைமுறையினருக்கு இந்தப் படம் புதிய அனுபவமாக இருக்கும், ஏனென்றால் அவர்கள் பல விஷயங்களைக் காண உள்ளனர். கருப்பு – வெள்ளையில் படத்தைப் பார்க்க இருக்கும் புதிய அனுபவம் கிட்டும்” என்றார்.
பிரமயுகம்: மம்மூட்டியின் இப்படம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாக இருக்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ராகுல் சதாசிவன் இயக்குகியுள்ளார். இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சேஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசை அமைத்துள்ளார். படம் இம்மாதம் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.