ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழகம் – கர்நாடகா ஆட்டம் டிராவில் முடிந்தது

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் – கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் கர்நாடகா 366 ரன்களும், தமிழகம் 151 ரன்களும் எடுத்தன.

2-வது இன்னிங்ஸில் அஜித் ராம், சாய் கிஷோர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் கர்நாடகா அணி 56.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு சுருண்டது. 355 ரன்கள் இலக்குடன் பேட்செய்த தமிழக அணி 3-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். விமல் குமார் 16, பிரதோஷ் ரஞ்சன் பால்10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கைவசம் 9 விக்கெட்கள் இருக்க வெற்றிக்கு மேற்கொண்டு 319 ரன்கள் தேவை என்ற நிலையில் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது தமிழக அணி. விமல் குமார் 31 ரன்களில் சசிகுமார் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய பாபா இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சன் பாலுடன் இணைந்து ஆட்டத்தை சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார்.

67 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இந்த ஜோடியை விஜயகுமார் வைஷாக் பிரித்தார். பிரதோஷ் ரஞ்சன் பால் 116 பந்துகளில், 10பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்தநிலையில் விஜயகுமார் வைஷாக் பந்து வீச்சில் தேவ்தத் படிக்கல்லிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய பூபதி குமார் 19, முகமது 15 ரன்களில் ஹர்திக் ராஜ் பந்தில் நடையை கட்டினர். இதையடுத்து களமிறங்கிய விஜய் சங்கர் அதிரடியாக விளையாடினார். இதனால் தமிழக அணி வெற்றியை நெருங்கும் சூழ்நிலை உருவானது. மறுபுறம் நிலைத்து நின்று விளையாடிய பாபா இந்திரஜித் 194 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்தநிலையில் ரன் அவுட் ஆனார்.

6-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 125 ரன்கள் குவித்தது. சிறிது நேரத்தில் விஜய் சங்கர் 107 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் விஜயகுமார் வைஷாக் பந்தில் ஆட்டமிழந்தார். களத்தில் நிலைப்பெற்றிருந்த முன்னணி பேட்ஸ்மேன்கள் இருவரும் 5 ரன்கள் இடைவெளியில் ஆட்டமிழந்தது தேக்க நிலையை உருவாக்கியது.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய சுரேஷ் லோகேஷ்வர் ஒரு ரன்னில் காவேரப்பா பந்தில் நடையை கட்டினார். தமிழக அணி 105 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 338 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. சாய் கிஷோர் 7, அஜித் ராம் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் மேற்கொண்டு 17 ரன்களை தமிழக அணி சேர்க்க முடியாததால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. கர்நாடகா அணி தரப்பில் விஜயகுமார் வைஷாக் 3, ஹர்திக் ராஜ் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றதன் வாயிலாக கர்நாடக அணிக்கு 3 புள்ளிகளும், போட்டியை டிரா செய்ததன் மூலம் தமிழக அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது.

6 ஆட்டங்களில் விளையாடி உள்ள கர்நாடகா அணி 3 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிராவுடன்24 புள்ளிகள் பெற்று ‘சி’ பிரிவில்தமிழக அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்துக்கு முன்னேறியது.

தமிழக அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி, 2 டிராக்களுடன் 22புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. திரிபுராவுக்கு எதிராக தமிழக அணி மோதிய ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே ரத்தாகி இருந்தது. இதனால் அந்த ஆட்டத்தில் தமிழக அணிக்கு ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

ரஞ்சி கோப்பையில் வெற்றி பெறும் அணிக்கு 6 புள்ளிகள் வழங்கப்படும். அதேவேளையில் 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது இன்னிங்ஸ் வெற்றி பெற்றாலோ கூடுதலாக ஒருபுள்ளி வழங்கப்படும். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறாமல் ஆட்டத்தை டிரா செய்தால் ஒரு புள்ளி மட்டுமே வழங்கப்படும்.

இந்த வகையில் தமிழக அணியானது சண்டிகர், ரயில்வே அணிக்கு எதிரான ஆட்டங்களில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று போனஸ் புள்ளிகளை பெற்றிருந்தது. குஜராத் அணி கோவாவுக்கு எதிரான ஆட்டத்தையும் டிரா செய்திருந்தது. அந்த ஆட்டத்திலும் அந்த அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றிருந்தால் 3 புள்ளிகளை பெற்றிருந்தது. இந்த கணக்கீடுகளின் படியே கர்நாடகா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது.