இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு. உரிய நேரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது இதற்கான காரணமாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீதான இடைநீக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

அப்போது சில நிபந்தனைகளுடன் இடைநீக்கத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும், ஒலிம்பிக் மற்றும் பிற முக்கிய தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளுக்கான ட்ரெயல்களில் அனைத்து மல்யுத்த வீரர்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதற்கு எழுத்துப்பூர்வமான உத்தரவாதத்தை இந்திய மல்யுத்த கூட்டமைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சஸ்பெண்ட் நடவடிக்கை திரும்பப் பெறப்பட்டதன் மூலம் இந்திய மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அடுத்து வரும் தொடர்களில் இந்தியா சார்பில் பங்கேற்று விளையாட முடியும். முன்னதாக, சஸ்பெண்ட் நடவடிக்கை காரணமாக தனி கொடியின் கீழ் இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்க வேண்டிய நிலை இருந்தது.